பழனியில் மாநில அளவிலான மகளிர் பளுதூக்கும் போட்டி: சேலம் அணி ஒட்டுமொத்த சாம்பியன்

பழனியில் ஐந்தாவது ஜூனியர் மற்றும் சீனியர் மாநில அளவிலான மகளிர் பளுதூக்கும் போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றன.

பழனியில் ஐந்தாவது ஜூனியர் மற்றும் சீனியர் மாநில அளவிலான மகளிர் பளுதூக்கும் போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றன.
 இதில், ஜூனியர், சீனியர் பிரிவில் சேலம் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. 
பழனி அடிவாரம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மற்றும் திண்டுக்கல் மாவட்ட அமெச்சூர் பளுதூக்கும் சங்கம், ஹெல்த் பிட்னஸ் சார்பில் இப்போட்டிகள் 2 நாள்கள் நடைபெற்றன.  போட்டிகளை சரவணப்பொய்கை ஸ்ரீகந்தவிலாஸ் பாஸ்கரன், தமிழ்நாடு பளுதூக்கும் சங்க தலைவர் பொன்சீலன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான மகளிர் பளுதூக்கும் போட்டியில்  திண்டுக்கல், கோவை, திருச்சி, ஈரோடு, நாகபட்டினம், திருப்பூர், சேலம் , தேனி உள்பட 25 மாவட்டங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 
45 கிலோ முதல் 87 கிலோ வரையில் பத்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட்டன.
 ஜூனியர் 49 கிலோ பிரிவில் திருவாரூர் நித்யா முதலிடமும், சேலம் தமிழ்செல்வி இரண்டாமிடமும், நாமக்கல் லதா மூன்றாமிடமும் பெற்றனர். சீனியர் பிரிவில் நாகப்பட்டினம் சிந்துஜா முதலிடமும், சேலம் இலக்கியா இரண்டாமிடமும், நாகப்பட்டினம் சரண்யா மூன்றாமிடமும் பெற்றனர்.
ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியனுக்கான முதல் பரிசை சேலத்தை சேர்ந்த அணியும், 2 ஆவது பரிசை நாகப்பட்டினம் அணியும், மூன்றாவது பரிசை தூத்துக்குடி அணியும் வென்றன. அதேபோல் ஜூனியர் பிரிவில் மூன்றாவது பரிசை திண்டுக்கல் அணி பெற்றது.
  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பழனி சார் ஆட்சியர் அருண்ராஜ் பதக்கங்கள், பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட அமெச்சூர் பளுதூக்கும் சங்க செயலாளர் நாகவடிவேல்,  பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com