திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்: ஊரக நலப்பணிகள் இயக்குநர் அறிவுறுத்தல்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்களுக்கு

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்களுக்கு ஊரக நலப் பணிகள் இயக்குநர் ருக்மணி அறிவுறுத்தினார். திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர்,  ரூ.18 கோடி செலவில்  கட்டப்பட்டு வரும் தாய் சேய் நலப் பிரிவுக்கான கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். மேலும்  மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, தாய்ப்பால் வங்கி, அறுவை சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, எக்ஸ்ரே பிரிவு உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.
 பின்னர், புதிதாக வழங்கப்பட்டுள்ள விழித்திரை அறுவை சிகிச்சைக்கான லேசர் கருவி, மேமோகிராம் கருவிகளையும் அவர் பார்வையிட்டார். 
அதனைத் தொடர்ந்து, மருத்துவமனை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்ற கூட்டத்தில், இயக்குநர் ருக்மணி பேசியது: 
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக நிலை உயர்த்தப்பட்டுள்ள திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனைத்து நவீன சிகிச்சை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இதுபோன்ற சூழலில், எலும்பு முறிவு பிரிவில் அனைத்து வசதிகள் இருந்தும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பழனி போன்ற சிறிய அரசு மருத்துவமனைகளில் கூட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 அதனால், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தேவைப்படும் நோயாளிகளுக்கு விரைவில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.  
 திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நவீன கருவிகள் மட்டுமின்றி, மருத்துவர் பணியிடங்களும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி  சிறப்பாக செயல்படும்பட்சத்தில், தேசிய ஊரக நலப்பணிகள் இயக்கத்திலிருந்து கூடுதல் நிதி பெற்று அதன் மூலம் நோயாளிகளுக்கு மேலும் வசதிகளை ஏற்படுத்த முடியும் என்றார்.
கூட்டத்தின்போது, நலப்பணிகள் இணை இயக்குநர் ஜெ.மாலதி பிரகாஷ், துணை இயக்குநர் பூங்கோதை (குடும்ப நலம்), மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமார், மாவட்ட ரத்த வங்கி அலுவலர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com