சோழர்கால நாணயங்கள்  கண்டெடுப்பு

பழனியை அடுத்த போடுவார்பட்டியில் ஒரு வீட்டில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் கால செப்பு  நாணயங்கள் கிடைத்தன.


பழனியை அடுத்த போடுவார்பட்டியில் ஒரு வீட்டில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் கால செப்பு  நாணயங்கள் கிடைத்தன.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த போடுவார்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம்.  இவர் வீட்டைச் சுத்தம் செய்யும் போது சில பழங்கால செப்பு நாணயங்கள் கிடைத்துள்ளன.  இவற்றை தொல்லியல் ஆர்வலர்கள் கதிரவன், பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான நந்திவர்மன், பழனியாண்டவர் மகளிர் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ராஜேஸ்வரி, ஆண்கள் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.  
இதுகுறித்து ஆய்வாளர் நந்திவர்மன் சனிக்கிழமை தெரிவித்தது:  இந்த செப்பு நாணயங்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. ராஜகேசரிவர்மன் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தைய நாணயங்களாகும். தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ அரசர்களில் புகழ் பெற்றவர் முதலாம் ராஜராஜ சோழன்.  இவர் கி.பி. 984 முதல் கி.பி.1014  வரை 30 ஆண்டுகள் தமிழகத்தை  ஆட்சி செய்தார். 
இவரது ஆட்சிக் காலம் தமிழக வரலாற்றின் பொற்காலம் என வரலாற்று ஆசிரியர்களால் புகழப்படுகிறது.  கி.பி. 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து இலங்கை முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். இலங்கை போரில் வெற்றி பெற்றதை குறிக்கும் வகையில் இந்த நாணயங்களை வெளியிட்டுள்ளார். தங்கம் மற்றும் செம்பினால் வெளியிடப்பட்ட இந்தக் நாணயங்கள், இலங்கை சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதி என்பதை குறிக்கிறது. 1 .5. செ.மீ விட்டமும், 0.5. மி.மீ தடிமனும் கொண்ட இந்த நாணயங்கள் ஒழுங்கற்ற வட்ட வடிவம் கொண்டுள்ளன. நாணயத்தின் ஒரு பக்கம் போர் வீரர்கள் வேலுடன் இருப்பது  போலவும், மற்றொருபுறம் ராஜராஜ சோழனில் முத்திரையும் பொறிக்கப்பட்டுள்ளது. 
 இந்த நாணயங்கள் பழனி உள்ளிட்ட பல இடங்களிலும் பரவலாக கிடைகின்றன. இதேபோல தங்கத்திலான நாணயங்கள் இதுவரை கிடைத்ததில்லை. இந்த நாணயங்கள் பழனி அரசு அருங்காட்சியகத்திற்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com