வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலிலிருந்து வசதிப் படைத்தவர்களை நீக்க வலியுறுத்தல்

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வசதிப் படைத்தவர்களை

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வசதிப் படைத்தவர்களை நீக்கிவிட்டு, தகுதியான பயனாளிகளை மட்டும் தேர்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
 திண்டுக்கல் அடுத்துள்ள பாடியூர் ஊராட்சிக்குள்பட்ட எட்டிக்குளத்துப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் தங்களை சேர்க்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் ரா.ரவி தலைமையில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் இதுதொடர்பாக கூறியதாவது: எங்கள் பகுதியில் வசதிப் படைத்தவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்போர் பட்டியலில் முறைகேடாக சேர்த்துள்ளனர். ஆனால், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைக் குடும்பங்கள் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. மாவட்ட ஆட்சியர் நியாயமான கணக்கெடுப்பு நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தகுதியான பயனாளிகள் அந்த பட்டியலில் இடம்பெறுவதற்கும், அரசின் நிதி ரூ.2ஆயிரம் கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். 
வேலை வழங்க கோரி தர்னா: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள குல்லலக்குண்டு பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கக் கோரி தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக அவர் கூறியது: கடந்த 2008ஆம் ஆண்டு எனது தந்தை கதிரி கால்நடைத்துறையில் பணிபுரிந்தபோது உயிரிழந்துவிட்டார். 
இதனை அடுத்து, கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கக் கோரி பல முறை மனு அளித்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏழ்மையான சூழலில் வசிக்கும் எனது குடும்பத்தை பாதுகாக்கும் வகையில், எனக்கு அரசுப் பணி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இலவச வீட்டு மனைப் பட்டா: நிலக்கோட்டை அடுத்துள்ள எழுவனம்பட்டியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள், அருந்ததியருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் பல முறை வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி மனு அளித்தபோதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை என தெரிவித்த பெண்கள், மாவட்ட நிர்வாகம் வீட்டு மனைப்பட்டா கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com