பழனியில் பேருந்துகள் பற்றாக்குறையால் பக்தர்கள் திடீர் தர்னா

பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ள நிலையில் போதிய அளவு பேருந்துகளை

பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ள நிலையில் போதிய அளவு பேருந்துகளை இயக்காததால் தற்காலிக நிலையத்தில் பேருந்தின் முன் அமர்ந்து பக்தர்கள்  ஞாயிற்றுக்கிழமை  தர்னாவில் ஈடுபட்டனர்.
பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 350 சிறப்புப் பேருந்துகள் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.  
பழனியில் ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பழனி முழுவதும் போக்குவரத்து மாற்றம், கூடுதல் போலீஸார் கண்காணிப்பு என பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இந்நிலையில் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இயங்கிய தற்காலிக பேருந்து நிலையத்தில் போதிய வழித்தடத்தில் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதியடைந்தனர்.  
தற்காலிக பேருந்து நிலையத்தில் உரிய வழித்தடங்களுக்கான வரிசையில் பக்தர்கள் காத்திருந்த நிலையில் பேருந்துகள் வரும் வழியிலேயே நிரம்பியபடி வந்ததால் பல மணி நேரமாக குழந்தைகளுடன், பெரியவர்களுடன் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் ஆத்திரமடைந்தனர்.  பக்தர்கள் கூட்டம் இல்லாத வழித் தடத்துக்கு பேருந்துகள் வெறுமனே நின்றிருந்த நிலையில் பக்தர்கள் அதிகமாக இருக்கும் வழித்தடத்துக்கு பேருந்துகளை மாற்றிவிடாமல் போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகக் குற்றம் சாட்டினர்.  இதையடுத்து ஆத்திரமடைந்த பக்தர்கள் பேருந்து நிலையத்துக்கு முன் பயணிகளுடன் வந்த பேருந்தை மறித்து தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.  
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் போக்குவரத்து ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் போலீஸார் தேனி செல்லவிருந்த பேருந்தை பக்தர்கள் அதிகமாக இருந்த வழித்தடங்களுக்கு மாற்றி பக்தர்களை அமைதிப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com