பரமக்குடியில் கழிவுநீர் கலப்பதால் மாசுபடும் வைகையாறு

பரமக்குடி பகுதி வைகை ஆறு மற்றும் வேந்தோணி கால்வாய் பகுதியில் நகராட்சி கழிவுநீர் கலப்பதால் நீர்நிலைகள் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

பரமக்குடி பகுதி வைகை ஆறு மற்றும் வேந்தோணி கால்வாய் பகுதியில் நகராட்சி கழிவுநீர் கலப்பதால் நீர்நிலைகள் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
 வைகை ஆற்றின் வலது கரையில் பரமக்குடி நகரும், இடது கரையில் எமனேசுவரம் பகுதியும் என பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளுடன் அமைந்துள்ளது. ஒருபுறம் மணல் கொள்ளையும், மறுபுறம் கழிவுநீரும் கலப்பதால் வைகை ஆறு பொலிவிழந்துள்ளது.
 வலதுகரையில் காட்டுப்பரமக்குடி முத்தையா கோயில் பகுதியிலிருந்து கிழக்கே காக்காத்தோப்பு வரையிலும் நகர் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும் ஒவ்வொரு தெருக்களின் வழியாக நேரடியாக வைகை ஆற்றில் கலக்கிறது.
 இதேபோல் இடதுபுறத்தில் மஞ்சள்பட்டிணம், வைகை நகர், எமனேசுவரம் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும் ஆற்றுப்பகுதியில் வாருகால் கட்டி விடப்படுகிறது. இதனால், ஆற்றில் கழிவுநீர் குளம் போல் தேங்கி, நிலத்தடி நீராதாரமும் மாசடைந்துள்ளது.மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 
விவசாய பாசனநீர் கால்வாய் பாதிப்பு: பாலன் நகர், பொன்னையாபுரம், பாரதிநகர், பர்மாகாலனி, திருவள்ளுவர் நகர் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது வைகை ஆற்றிலிருந்து கண்மாய்களுக்கு பாசனநீர் செல்லும் வேந்தோணி கால்வாய் பகுதியில் விடப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கு செல்லும் பாசனநீர் முற்றிலும் மாசடைகிறது. 
 நகரிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து, அந்த தண்ணீரை உரப்புளி பகுதியில் உள்ள புல்பண்ணைக்கு கொண்டு செல்வதற்காக, கடந்த 1972-ஆம் ஆண்டு நகரின் கிழக்குப் பகுதியில் கழிவுநீர் வடிகால் பண்ணை அமைக்கப்பட்டது. இவ்வாறு கழிவுநீரை ஆற்றுக்குள் கலக்க விடாமலும், அதன்மூலம் புல் வளர்த்து மாட்டுத்தீவனமாக்கி நகராட்சிக்கு வருவாய் ஈட்டும் முறையும் ஏற்படுத்தப்பட்டது. தற்போது இந்த கழிவுநீர் வடிகால் பண்ணை பெயரளவுக்கே செயல்படுகிறது.
 நீதிமன்றத்தில் வழக்கு: வைகை ஆறு மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் தவறவிட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குரைஞர் அருண்நிதி வழக்கு தொடுத்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்குரைஞர் குழுவினரும் பரமக்குடி வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றுள்ளனர்.
 ஆண்டுதோறும் சித்திரை மற்றும் பங்குனி மாதங்களில் பரமக்குடி வைகை ஆற்றில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கூடுவர். 
 தற்போதைய நிலையில் வைகை ஆறு கழிவுநீர் வடிகாலாக இருப்பதால் துர்நாற்றம், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் இடமாக உள்ளது.
 எனவே, பரமக்குடி நகர் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வைகை ஆற்றில் கலப்பதை தடுக்க பாதாளச் சாக்கடைத் திட்டம் மற்றும் ஆங்காங்கே கழிவுநீர் வடிகால் பண்ணைகள் அமைத்து சுகாதாரத்தையும், நீர் நிலைகளையும் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com