ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை கிராம சபைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் சிறப்புக் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை (டிச.19) நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் சிறப்புக் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை (டிச.19) நடைபெறுகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
  மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி கிராம ஊராட்சியின் சமூகப் பொருளாதார நிலையில், தற்போதைய நிலவரம் குறித்து அந்தந்தப் பகுதியில் உள்ள மகளிர் குழுக்களின் உறுப்பினர்கள் மூலம் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் மக்கள் திட்டமிடல் இயக்கத்தின் மூலம் கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்கான அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.  
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும், புதன்கிழமை மக்களால் தயாரிக்கப்படும் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட அறிக்கை விவாதிக்கப்படும் வகையில் சிறப்புக் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. இதில் 29 பொருள்கள் சார்ந்த 18 துறைகள் ஒருங்கிணைந்து ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் செயல்படுத்தவுள்ள திட்டங்கள், மக்கள் நலன் சார்ந்த வாழ்வாதாரப் பிரச்னைகள் தொடர்பாக விவாதித்து வளர்ச்சித் திட்டங்களுக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னிலையிலும் விவாதிக்கப்படும். 
 மக்கள் பங்களிப்புடன் தயாரிக்கப்படும் இந்த கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட அறிக்கை வரும் 31 ஆம் தேதிக்குள் அந்தந்தக் கிராம மக்களின் ஒப்புதலுடன் தேவையான மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் கிராமசபைக் கூட்டம் கூட்டப்பட்டு ஒப்புதலுக்காக வைக்கப்படும். 
ஆகவே அனைத்துக் கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவதை கண்காணிப்பதற்காக ஊராட்சி ஒன்றிய அளவிலும், ஊராட்சி அளவிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கிராமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டுக்கும் உகந்த கருத்துகளை தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com