"கஜா' புயல்: படகை மீட்கச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி சாவு

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் கஜா புயலின்போது நாட்டுப் படகை மீட்கச் சென்ற மீனவர், கடலில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் கஜா புயலின்போது நாட்டுப் படகை மீட்கச் சென்ற மீனவர், கடலில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 
மண்டபத்தை அடுத்த வேதாளை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி (52). மீனவரான இவருக்கு மனைவி, மற்றும் இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூவருக்கும் திருமணமான நிலையில், முனியசாமி, தனது மனைவி பாப்பாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை, தோணித்துறை வடக்கு துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த படகை கரையில் ஏற்றி வைத்து விட்டு வருவதாக முனியசாமி மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றார்.
ஆனால், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அதையடுத்து அவரது உறவினர்கள் தோணித்துறை கடற்கரைக்கு சென்று பார்த்தனர். அங்கு முனியசாமியின் இருசக்கர வாகனம், உடைகள் இருந்தன. கடற்கரை பகுதியில் தேடி பார்த்தும் அவரை காணாததால், இதுகுறித்து கடலோர காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் பாம்பன் பாலத்தின் அருகே சடலம் ஒன்று கிடப்பதாக மண்டபம் கடலோர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். இதில், சடலமாக கிடந்தது முனியசாமி என்பது தெரியவந்தது. 
பின்னர், இதுகுறித்து கடலோர காவல் படையினர் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர். கஜா புயல் காரணமாக படகை மீட்டு கரைக்கு கொண்டு வர சென்ற மீனவர், கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வேதாளை கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com