நரிப்பையூர் உலகம்மன் கோயிலில் 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் உலகம்மன் கோயிலில் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் ஞாயிற்றுக்கிழமை புதிய கல்வெட்டுகளை


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் உலகம்மன் கோயிலில் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் ஞாயிற்றுக்கிழமை புதிய கல்வெட்டுகளை கண்டறிந்தனர்.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரலாற்றுத்துறை சார்பாக நரிப்பையூர் மற்றும் வேம்பார் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவில் இந்நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியது: நரிப்பையூர் அருகே குதிரைமொழி பகுதியில் எட்டுக்கைகளுடன் வடக்கு நோக்கி உலகம்மன் (காளி) அமர்ந்த நிலையில் பழமை வாய்ந்த கோயில் உள்ளது. மேற்கூரை இல்லாத இக்கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, அழிந்த நிலையில் ஒரு கல்வெட்டு உள்ளது. இக்கோயிலுக்கு தானம் வழங்கியது தொடர்பான கல்வெட்டாக இருக்கலாம். இக்கல்வெட்டில் கமுதி அருகிலுள்ள எருமைக்குளம், கடலாடி அருகிலுள்ள ஆப்பனூர் ஆகிய ஊர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. நாற்பத்தெண்ணா மரப்படி, பூப்பலகை, நல்லூர்குளத்தில், ஆண்டபிரான், அழகிய பாண்டிய, செந்தாங்கி ஆகிய சொற்கள் இதில் காணப்படுகின்றன.
இக்கல்வெட்டில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்ணுக்கு அமைக்கப்பட்ட கோயில் மாலைக்கோயில் என்றும், மாலையடி, மாலையீடு, தீப்பாய்ஞ்சஅம்மன் கோயில், மாலைக்காரி, சீலைக்காரி அம்மன் கோயில் என்றும் அழைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
நான்குகால் மண்டபம்: நரிப்பையூரில் நான்குகால் மண்டபம் போன்ற அமைப்பில் மணற்பாறைகளால் கட்டப்பட்ட மூன்று மாலைக்கோயில்கள் உள்ளன. சாயல்குடி பகுதியில் உலகு சிந்தாமணி என்ற வளநாட்டுப் பகுதி இருந்ததாக குறிக்கப்பட்டுள்ளது. இவ்வளநாடு மேலக்கிடாரம் வரை இருந்துள்ளது. எனவே நரிப்பையூர் பகுதியும் இவ்வளநாட்டுப் பகுதியில் இருந்தாகக் கொள்ளலாம்.
தெற்கு நரிப்பையூர் கடற்கரை மற்றும் வெட்டுக்காடு ஆகிய பகுதிகளில் பாண்டியர் கால சிவன் கோயில்கள் மண்ணில் புதைந்த நிலையில் உள்ளன. அதேபோல் நரிப்பையூர் அருகில் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ள பிழை பொறுத்தம்மன் என்று அழைக்கப்படும் எட்டுக் கைகளையுடைய காளி கோயில் உள்ளது. மதுரை ஐராவதநல்லூரில் இதே சிலை போன்ற ஒரு சிலை உள்ளது. மதுரைக்கும், நரிப்பையூருக்கும் இடையே உள்ள தொடர்பை இதன் மூலம் அறிய முடிகிறது.
மேலும் இப்பகுதியில் மணக்காட்டு அய்யனார், செவக்காட்டு அய்யனார் ஆகிய இரு கோயில்கள் உள்ளன. மண்ணால் செய்யப்பட்ட அய்யனார் மற்றும் குதிரை சிலைகளே இங்கு வழிபாட்டில் உள்ளன என்றார்.
இந்த ஆய்வு முடிவுகளை மரபு நடை'க்காக வந்திருந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்களிடம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் விளக்கினர். அப்போது கமுதி நிறுவன ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப்பாண்டியன், மரபு நடை ஒருங்கிணைப்பாளர் நிவாஸ்சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com