நவ.27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில், பழைய

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
     இது குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், தமிழரசன், இளங்கோ ஆகியோர் வியாழக்கிழமை கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கிடையேயான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2017 ஜூலை 18 முதல் தொடர்ந்து போராடி வருகிறோம்.   ஆனால், எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்க மறுத்து வருகிறது. மேலும், பேச்சுவார்த்தை உடன்படிக்கையின்படி இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நவம்பர் 27 ஆம் தேதி முதல் பணிகளை புறக்கணித்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
   இதையடுத்து, முதல் கட்டமாக அக்டோபர் 4 ஆம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம். தொடர்ந்து, அக்டோபர் 13 ஆம் தேதி சேலத்தில் உள்ள தமிழக முதல்வர் இல்லம் முன்பு வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டை நடத்த உள்ளோம். தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தவறும்பட்சத்தில், அறிவித்தபடி நவம்பர் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில்: ராமநாதபுரம் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
 ஒருங்கிணைப்பளர் பெ.சேகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் முருகேசன், மாவட்டச் செயலர் ஜெலியோ-ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபர்  4 ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. போராட்டத்துக்கான பிரசாரப் பயணத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 24 ஆம் தேதி முதல் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் இ.ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com