ராமேசுவரத்தில் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல்: ஒருவர் கைது; 3 பேர் தப்பி ஓட்டம்

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக் காவலரை தாக்கி, அவரது சட்டையை கிழித்த ஒருவர் கைது 

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக் காவலரை தாக்கி, அவரது சட்டையை கிழித்த ஒருவர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ராமேசுவரம் திட்டக்குடி கார்னர் பகுதியில் போக்குவரத்து காவலர் மதன்ராஜா, ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், ராமேசுவரத்தைச் சேர்ந்த 4 பேர் காரில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மதுபோதையில் வந்துள்ளனர்.
 திட்டக்குடி கார்னர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது, போக்குவரத்து காவலர் மதன்ராஜாவிடம் காரில் வந்த நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த நபர்கள் திடீரென மதன்ராஜாவை தாக்கினர். 
இதில், அவரது சட்டை கிழிந்து விட்டது. இதனைக் கண்ட சக காவலர்கள் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றனர். அவர்களில் ஒருவர் மட்டும் போலீஸார் வசம் சிக்கினார். மற்ற 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அதைத்தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீஸார், பிடிபட்ட நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், அவர் ராமேசுவரம் நேதாஜி நகரைச் சேர்ந்த முனியாண்டி மகன் ராமமூர்த்தி என்பது தெரியவந்தது. 
அதையடுத்து போலீஸார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். மேலும் தப்பிய ஓடிய 3 பேர் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com