ராமேசுவரத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட  624 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது

ராமேசுவரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் கடத்தி வரப்பட்ட 624 மது பாட்டில்களை போலீஸார் கைப்பற்றி ஒருவரை கைது செய்தனர். 

ராமேசுவரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் கடத்தி வரப்பட்ட 624 மது பாட்டில்களை போலீஸார் கைப்பற்றி ஒருவரை கைது செய்தனர். 
   தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து ராமேசுவரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்து அனைத்து மதுபானக் கடைகளும் அகற்றப்பட்டன. அதன் பின்னர் ராமேசுவரத்தில் மதுபானக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால்  கடைகள் திறக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையை சிலர் பயன்படுத்தி, பாம்பன் மதுபானக் கடைகளில் இருந்து அதிகளவில் மதுபாட்டில்களை வாகனங்களில் கடத்தி வந்து ராமேசுவரத்தில் படகுகளில் வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
  இந்நிலையில், ராமேசுவரத்துக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக காவல்துறைக்கு ஞாயிற்றுகிழமை இரவு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பேருந்து நிலையம் அருகே நகர் காவல்நிலைய ஆய்வளார் எம்.செந்தில்குமார், உதவி ஆய்வாளர் அருள்குமார் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 
அப்போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை நிறுத்த முயன்றபோது, அதில் இருந்து மூன்று பேர்  தப்பி ஓட்டம் பிடித்தனர். போலீஸார் விரட்டிச் சென்று ஒருவரைக் கைது செய்தனர். காரில் 624 மதுபாட்டில்கள் இருந்தன. இதனைதொடர்ந்து, மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர் வழுதூர் பகுதியை சேர்ந்த கார்மேகம் என்பவரது மகன் பிரகாஷ் என்பது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com