வறுமைக் கோட்டு பட்டியலில் இல்லாத 7,843 பேர் சிறப்பு நிதிக்கு விண்ணப்பம்

ராமநாதபுரத்தில் வறுமைக் கோடு பட்டியலில் இடம் பெறாத 7,843 பேர் தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

ராமநாதபுரத்தில் வறுமைக் கோடு பட்டியலில் இடம் பெறாத 7,843 பேர் தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலில் 647 பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் தெருவோரத்தில் வசிப்போர் 64 பேரும் சேர்க்கப்பட்டனர். அதன்படி நகரில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் மொத்தம் 711 பேர் என கூறப்பட்டது. 
இந்நிலையில், அரசின் சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ராமநாதபுரம் நகராட்சியில் பெறப்பட்டன. அதன்படி விண்ணப்பங்கள் அனைத்தும் சுகாதார அலுவலர் அலுவலக பணியாளர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. ஆய்வு அடிப்படையில், பயனாளிகளின் பெயர்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் நகராட்சியில் வியாழக்கிழமை (மார்ச் 7) வரையில் ஏற்கெனவே உள்ள வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் பட்டியலைத் தவிர்த்து 7,437 பேருடைய விண்ணப்பங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 400 விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்ய தயார் நிலையில் உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதற்கிடையே விண்ணப்ப கால அவகாசம் முடிந்தநிலையிலும், ஏராளமானோர் அதிமுக பிரமுகர்களின் சிபாரிசு அடிப்படையில் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். 
அந்த விண்ணப்பங்களையும் கணினி பதிவேற்றத்துக்கு உள்படுத்தும் கட்டாயம் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அதன்படி ராமநாதபுரத்தில் மட்டும் சுமார் 8 ஆயிரம் பேருக்கு தமிழக அரசின் சிறப்பு நிதியான ரூ.2 ஆயிரம் வழங்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பு நிதியைப் பெறும் அனைவரும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களா என உறுதி கூறமுடியாத நிலை உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நகரில் சுமார் 60 ஆயிரம் பேர் உள்ள நிலையில், அதில் 8 ஆயிரம் பேருக்கு சிறப்பு நிதி வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com