கஜா' புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் க.பாஸ்கரன்

கஜா' புயல் பாதிப்பு குறித்து முழுமையான விவரங்கள் கிடைத்ததும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக


கஜா' புயல் பாதிப்பு குறித்து முழுமையான விவரங்கள் கிடைத்ததும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் க.பாஸ்கரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், சிவகங்கை எம்பி. பிஆர்.செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதில், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம் மேலவண்ணாரிருப்பு, கட்டுகுடிப்பட்டி, எஸ்.புதூர், வாராப்பூர், குளத்துப்பட்டி, வலசைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் விளை நிலங்களில் பயிர் சேதம், தென்னை மரங்கள் பாதிப்பு, வாழை, பப்பாளி, தேக்கு உள்பட பல்வேறு மரங்கள் பாதிக்கப்பட்டதை பார்வையிட்ட பின் அமைச்சர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் கஜா' புயல் காரணமாக பழுதடைந்துள்ள மின்கம்பங்களை சரி செய்வதற்காக வெளி மாவட்டங்களிலிருந்து மின் வாரியப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் துரிதமாக பணியாற்றி விரைவில் மின் தேவையை பூர்த்தி செய்வர்.
இந்த புயலின் காரணமாக சுவர் இடிந்து விழுந்தும், மரம் விழுந்தும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இவை தவிர, புயலின் பாதிப்புகள் குறித்து அந்தந்த பகுதியில் உள்ள அரசு அலுவலர்கள் கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முழுமையான விவரங்கள் வந்தவுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும்.ஆகவே கஜா புயல் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்களுக்கு சிவகங்கை மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், நிலஅளவைத் துறை உதவி இயக்குநர் யோகராஜன், வட்டாட்சியர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன்,திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com