மானாமதுரை அருகே மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது

மானாமதுரை அருகே மயில்களை விஷம் வைத்துக் கொன்ற விவசாயியை வனத்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.


மானாமதுரை அருகே மயில்களை விஷம் வைத்துக் கொன்ற விவசாயியை வனத்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 25-க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தன. இதனை அந்த வழியாகச் சென்ற சிலர் பார்த்தவுடன், இறந்த மயில்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து விட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிப்பதற்காக சென்றனர். அதன்பின்னர் வெள்ளிக்கிழமை இரவு அங்கு சென்று பார்த்த போது குவித்து வைக்கப்பட்டிருந்த மயில்களை காணவில்லையாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட வனவர் செல்லமணி, வனக்காப்பாளர் மலைச்சாமி உள்ளிட்ட அலுவலர்கள் சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணை செய்தனர்.
அப்போது காளையார்கோவில் அருகே உள்ள பொன்னொளி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் (48) என்பவர் ராஜகம்பீரத்தில் தங்கி 3 ஏக்கர் வயல்வெளியை குத்ததைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவது தெரிய வந்தது. இவர் தனது வயல் பகுதியில் விதைத்துள்ள நெல்லை மயில்கள் சாப்பிடாமல் இருப்பதற்காக வரப்புகளில் குருணை மருந்தை வைத்திருந்தாராம். அதனை சாப்பிட்ட மயில்கள் இறந்து போயிருப்பது தெரிய வந்தது.
மேலும் இறந்த நிலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த மயில்களை எடுத்து அதே பகுதியில் புதைத்ததையும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து சிவகங்கை மாவட்ட வனத்துறையினர் சந்திரனை கைது செய்து, புதைத்து வைக்கப்பட்டிருந்த மயில்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com