கண்டுப்பட்டியில் மஞ்சுவிரட்டு: மாடுபிடி வீரர்கள் 69 பேர் காயம்

சிவகங்கை அருகே கண்டுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 710 காளைகள் சீறிப்பாய்ந்தன. மாடுபிடி வீரர்கள் 69-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


சிவகங்கை அருகே கண்டுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 710 காளைகள் சீறிப்பாய்ந்தன. மாடுபிடி வீரர்கள் 69-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கண்டுப்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் முன்பு உள்ள திடலில் சனிக்கிழமை அனைத்து மதத்தினரும் பங்கேற்று சமத்துவப் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, தொழுவத்திலிருந்து அவிழ்த்து விட வேண்டிய காளைகளை அந்தோணியார் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக தொழுவத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதையடுத்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
அதன்பின்னர், மஞ்சுவிரட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த தொழுவத்திலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக பதிவு செய்யப்பட்ட 92 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சில்வர் குடம் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. இவை தவிர, மஞ்சுவிரட்டு திடலிலிருந்து 650-க்கும் மேற்பட்ட காளைகள் விரட்டு மாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை பிடித்தனர். சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பார்வையாளராக கலந்து கொண்டனர்.
இதில், 69-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு மஞ்சுவிரட்டு திடலில் அமைப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த கற்களத்தூரைச் சேர்ந்த உலகநாதன்(36), ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த பிரபு(21), பொன்னமரவாவதியைச் சேர்ந்த மதன்(18), திருவாதவூரைச் சேர்ந்த மலைச்சாமி உள்ளிட்ட 14 மாடு பிடி வீரர்களும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் தலைமையில் 540 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், மஞ்சுவிரட்டை வெளியூரிலிருந்து காண வந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கண்டுப்பட்டி கிராமத்தினர் விருந்து வழங்கினர்.
மாவட்ட ஆட்சியர் கண்டிப்பு: கண்டுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாவட்ட நிர்வாகம் அறுவுறுத்திய விதிமுறைகளை பின்பற்றாமல் மஞ்சு விரட்டு திடலில் விரட்டு மாடுகளாக அவிழ்த்து விட்டதால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் விழா ஒருங்கிணைப்பாளரிடம் தனது கண்டிப்பை பதிவு செய்தார். மேலும், மாடுபிடி வீரர்களுக்கு பரிசோ அல்லது குழு (அடையாளம் காண்பதற்கு)சீருடை வழங்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com