காரைக்குடியில் சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

காரைக்குடி ரயில் நிலையத்துக்குச் செல்லும் சிமென்ட் சாலையில் விபத்துகள் அதிகரித்து வருவதால் சாலையை அகலப்படுத்த வேண்டும் என காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை


காரைக்குடி ரயில் நிலையத்துக்குச் செல்லும் சிமென்ட் சாலையில் விபத்துகள் அதிகரித்து வருவதால் சாலையை அகலப்படுத்த வேண்டும் என காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கழகத்தின் தலைவர் சாமி. திராவிடமணி வெள்ளிக்கிழமை கூறியதாவது: காரைக்குடி நகரில் அரசு மருத்துவமனை, தீயணைப்பு மற்றும் மீட்புப்படை நிலையம், ரயில்நிலையம், பள்ளி ஆகியன அமைந்துள்ளன. இச்சாலை 1937 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் காலத்தில் 16 அடி அகலத்தில் சிமென்ட் சாலையாக அமைக்கப்பட்டது. தற்போது இது அரியக்குடி, மாத்தூர், இலுப்பக்குடி, கண்டதேவி கோயில்களுக்கும், உஞ்சனை, மேலச் செம்பொன்மாரி வழியாக தேவகோட்டைக்கு நகர்ப்புற வழிச்சாலையாகவும், அதிக வாகனங்கள் செல்லும் சாலையாகவும் உள்ளது. தினமும் சிற்றுந்துகள், சரக்கு லாரிகள், கனகர வாகனங்கள், பொக்லைன் இயந்திரங்கள், பள்ளி - கல்லூரி பேருந்துகள் என போக்குவரத்து அதிகரித்துள்ளதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன.
எனவே, விபத்துகளைத் தடுக்க சாலையின் முக்கிய சந்திப்புப் பகுதியாக உள்ள புதிய பேருந்து நிலையம், மருதுபாண்டியர் நகர் பகுதியில் போக்குவரத்து குறியீடாக ஒளிரும் மின்விளக்குகள், வேகத்தடைகள் அமைத்தால் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்திச் செல்ல ஏதுவாக இருக்கும். மேலும், இச்சாலை பல ஆண்டுகளாக 16 அடி அகலத்தில் குறுகியதாக இருப்பதால் இதனை 30 அடிச்சாலையாக அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com