அருப்புக்கோட்டையில் சந்தைச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை நகர் மையத்திலுள்ள கருவாடுப்பேட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து அண்ணாசிலை பகுதி சந்தை

அருப்புக்கோட்டை நகர் மையத்திலுள்ள கருவாடுப்பேட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து அண்ணாசிலை பகுதி சந்தை வரையிலான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 அருப்புக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும், நகர் பகுதியிலிருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சிறுவியாபாரிகள்  மிட்டாய்கள் உள்ளிட்ட  இனிப்புவகைகள், காய்கறிகள், பலசரக்கு, ஜவுளி, பாத்திர வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வாங்கிச் செல்ல அண்ணா சிலை சந்தை மற்றும் நாடார் மகமைக் கடை அருகிலுள்ள ஜவுளிக்கடை சந்து உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்துசெல்கின்றனர். இதில் குறிப்பாக இங்குள்ள நாடார் உறவின்முறைக் கட்டடம் உள்ள பகுதியிலிருந்து முருகன் கோயிலுக்குச் செல்லும் சாலை வரை ஒரு அடி ஆழமுள்ள பள்ளங்களுடனும், குண்டும் குழியுமாக கிடந்தது. இதனால் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாவதாகப் புகார் எழுந்தது. எனவே இச்சாலையில் தற்காலிகமாக மண் மற்றும் பெரிய கற்களை போட்டு சமப்படுத்தி வைத்தனர். ஆனால் முறையாக மீண்டும் தார்ச்சாலை  அமைக்கப்பட வில்லை. இக்காரணத்தால் சில வாரங்களுக்கு முன் அடுத்தடுத்துப் பெய்த மழைக்கு மண் கரைந்து தற்போது மீண்டும் குண்டும் குழியமாக மாறி விட்டது. இதே சாலையில் தான் அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகர், ராமேசுவரம், தூத்துக்குடிக்கு பேருந்துகள் அனைத்தும் செல்வது குறிப்பிடத்தக்கது. எனவே அதிக வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் புழக்கமுள்ள இப்பிரதானச் சாலையில் புதிய தார்ச்சாலை அமைத்து  முறையாகப் பராமரிக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com