காகித கப்புகளுக்கு தடையிலிருந்து விலக்கு இல்லை: சிவகாசியில் தயாரிப்பாளர்களுக்கு சிக்கல்

பிளாஸ்டிக் இழையுடன் கூடிய காகித கப்புகளுக்கு தடை பட்டியலிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என 

பிளாஸ்டிக் இழையுடன் கூடிய காகித கப்புகளுக்கு தடை பட்டியலிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என தமிழக அரசு முடிவு செய்துள்ளதால், சிவகாசியில் காகித கப்பு தயாரிப்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு ஜனவரி 1- ஆம் தேதிமுதல் தமிழகத்தில் தடை விதிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் இழையுடன் கூடிய காகித கப்புகளை தடை பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
காகித கப்புகளில் 5 சதவீதம் மட்டுமே பிளாஸ்டிக் இழைகள் பயன்படுத்துவதாக அதன் தயாரிப்பாளர்கள் விளக்கமளித்தனர். தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் இதுபோன்ற காகித கப்புகளை ஆண்டுக்கு 2 ஆயிரம் டன் அளவுக்கு உற்பத்தி செய்கிறது. எனவே பிளாஸ்டிக் தடை பட்டியலில் காகித கப்புகளை இணைக்கக் கூடாது என்ற கோரிக்கை வலுவடைந்தது. இச்சூழ்நிலையில் தடை பட்டியலிலிருந்து நீக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில், மத்திய அரசின் மத்திய பிளாஸ்டிக்  பொறியியல் தொழில் நுட்பக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு காகித உற்பத்தி நிறுவனம் ஆகியன இடம் பெற்றிருந்தன. இக்குழுவினர் கூடி பிளாஸ்டிக் இழை பயன்படுத்தப்பட்ட காகித கப்புகளை அனுமதிக்கலாமா என விவாதித்தனர்.
இதையடுத்து இக்குழு, அரசுக்கு தனது பரிந்துரையை அனுப்பியது. அதில் காகித கப்புகளில் 5 சதவீதம் பிளாஸ்டிக் இழைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், அவை எளிதில் மக்கும் தன்மையை அடையாது என தெரிவித்திருந்தனர்.
எனவே பிளாஸ்டிக் இழையுடன் கூடிய காகித கப்புகளுக்கு தடை பட்டியலிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த முடிவினால் சிவகாசியில் காகித கப்புகள் தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடியும், சிக்கலும் ஏற்பட்டுள்ளது. சிவகாசியில் சுமார் 30 ஆலைகள் காகித கப்புகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இங்கு தயாரிக்கப்படும் கப்புகள் இந்தியா முழுவதும் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிவகாசியில் மட்டும் மாதம் 5000 முதல் 6000 டன் வரையிலான காகிதக் கப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இத்தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு பிளாஸ்டிக் இழையுடன் கூடிய காகித கப்புகளுக்கு தடை பட்டியலிலிருந்து விலக்கு இல்லை என முடிவு செய்துள்ளது, சிவகாசி தயாரிப்பாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சிவகாசியில் காகித கப்புகளுக்கு பிளாஸ்டிக் இழையை வருடிக்கொடுக்கும் ஆலை நடத்தி வரும் அண்ணாமலை கூறியதாவது: கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பிளாஸ்டிக் இழையுடன் கூடிய காகித கப்புகளுக்கு தடைபட்டியலிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இந்நிலையில் தற்போது தடை பட்டியலிலிருந்து விலக்கு இல்லை என அரசு முடிவு எடுத்திருப்பதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் அரசுக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளோம். தமிழக அரசு எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்யும் என நம்புகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com