விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு விடுதி ஊழியர்கள் குடும்பத்துடன் காத்திருப்புப் போராட்டம்

விருதுநகர் மாவட்ட ஆதி திராவிட நலத்துறை விடுதிகளில் பணி புரியும் சமையலர், துப்புரவு பணியாளர் 47 பேருக்கு பணி வழங்கக் கூடாது என


விருதுநகர் மாவட்ட ஆதி திராவிட நலத்துறை விடுதிகளில் பணி புரியும் சமையலர், துப்புரவு பணியாளர் 47 பேருக்கு பணி வழங்கக் கூடாது என தெரிவித்ததை கண்டித்து அந்த ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளில் காலியாக இருந்த 57 சமையலர், 36 துப்புரவு பணியாளர்கள் பணியிடங்கள் கடந்த 2014 இல் நிரப்பப்பட்டது. இதில், 38 சமையலர்கள், 9 துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 47 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களை, அப்போது ஆதி திராவிட நலத்துறை அலுவலர் முருகேசன் நியமனம் செய்தார். இது குறித்து அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இந்நிலையில், கடந்தாண்டு பணி நியமனம் செய்யப்பட்ட அனைவரையும் ஏன் பணி நீக்கம் செய்ய கூடாது என மெமோ வழங்கப்பட்டது.
ஆனால், அதற்கான ஆவண நகல் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கேட்கப்பட்டதற்கு இதுவரை வழங்க வில்லை. இந்நிலையில், மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அலுவலர் சார்பில், சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், விதிமீறல்கள் மூலம் பணி நியமனம் பெற்ற பணியாளர்களிடம் அரசு விதிப்படி காப்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விதிமீறி பணி நியமனம் பெற்ற 47 பேரை, நவ., 12 முதல் பணி செய்ய அனுமதி வழங்கக் கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 47 பேரின் குடும்பத்தினர் திங்கள்கிழமை ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு வந்த போலீஸார், ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அழைத்து வந்தனர். ஆனால், ஆட்சியர் அ. சிவஞானம் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த கூட்ட அரங்கு முன்பு குடும்பத்துடன் அமர்ந்து அவர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com