உள்ளாட்சி தேர்தலுக்கு கூடுதல் வாக்குச்சாவடி தேவைப்பட்டால் கருத்துரு அனுப்பலாம்: அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு கூடுதல் வாக்குச்சாவடி தேவைப்பட்டால், மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு


விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு கூடுதல் வாக்குச்சாவடி தேவைப்பட்டால், மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பலாம் என அலுவலர்களுக்கு தமிழக தேர்தல் ஆணையர் எம். மாலிக் பெரோஸ்கான் அறிவுறுத்தினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து, நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் முன்னிலை வகித்தார். மாநில தேர்தல் ஆணையர் எம். மாலிக் பெரோஸ்கான் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் 20 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 200 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 450 ஊராட்சி தலைவர்களுக்கான பதவி, 3,372 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களும் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சிகளை பொருத்தவரை 225 நகராட்சி வார்டுகள், 144 பேரூராட்சி வார்டுகள், 7 நகர்மன்ற தலைவர் பதவிக்கான இடங்களும், 9 பேரூராட்சி தலைவர் பதவிக்கான இடங்களும் உள்ளன.
தேர்தல் தொடர்பான பொருள்களின் இருப்புப் பதிவேட்டினை முறையாக பராமரிக்க வேண்டும். இருப்பு வைக்கப்பட்டுள்ள அறையில் தீயணைப்புக் கருவி பயன்பாட்டில் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் கூடுதலாக தேவைப்படும் இடங்கள் குறித்து, அதற்கான கருத்துருகளை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வாக்குச்சாவடிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். வாக்குச்சாவடிகளின் தற்போதைய நிலையினை ஆய்வு செய்து குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். வார்டு மறுவரையறை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் விவரங்கள் உள்ளாட்சி தேர்தலின் போது வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் விடுதலின்றி சேர்க்கப்பட வேண்டும். இதனை கண்காணிக்க பொறுப்பு அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும். வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு நிர்ணயம் செய்யும் நிகழ்வில் உரிய விதிமுறைகளை பின்பற்றி, எவ்வித தவறும் நிகழாத வண்ணம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள் வைக்கப்பட்டுள்ள அறையினையும், உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய வாக்குச்சீட்டு வைக்கப்பட்டுள்ள அறையினையும் மாலிக் பெரோஸ்கான் ஆய்வு செய்தார்.
பின்னர், விருதுநகர், அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகங்களில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள சட்ட முறையிலான படிவங்கள், கையேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமார், திட்ட இயக்குநர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com