விருதுநகர், அருப்புக்கோட்டை கோயில்களில் நீதிபதிகள் ஆய்வு

விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை கோயில்களில் நீதிபதிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை கோயில்களில் நீதிபதிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுபடி விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா, மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி சம்பத்குமார் ஆகியோர் விருதுநகரில் உள்ள சொக்கநாதர் கோயிலில் திங்கள்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது, கோயில் அமைந்திருக்கும் இடத்தின் அளவு, கோயிலுக்கு சொந்தமான இடங்கள் குறித்து இந்து சமய அறநிலைய துறை அலுவலர்களிடம் அவர்கள் கேட்டறிந்தனர். 
பின்னர், சமையலறையை பார்வையிட்ட பின், கோயிலை தூய்மையாக வைத்து கொள்ள நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதைத் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்த நீதிபதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் புறப்பட்டுச் சென்றனர். இந்த ஆய்வையொட்டி அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அருப்புக்கோட்டை: அதே போல், அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசொக்கநாதர் ஆலயத்தில் விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா தலைமையில் மாவட்டத் தலைமைக் குற்றவியல் நீதிபதி சம்பத்குமார் முன்னிலையில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
அப்போது இக்கோயிலின் அன்னதான மண்டபம், சமையல் கூடம், கைகழுவும் இடம், கோயிலின் வெளிப்பிரகாரம், உள்பிரகாரத்தில் உள்ள நைவேத்திய சமையல் நடைபெறும் இடம், ஜெனரேட்டர் அறை, வாருகால் ஆகியவற்றை நீதிபதி முத்துசாரதா பார்வையிட்டார். 
பின்னர் கோயிலின் செயல் அலுவலர் சத்திய நாராயணன் முன்னிலையில் கோயில் நிர்வாக அலுவலகக் கோப்புகள் ஆகியவற்றையும் அவர் ஆய்வு செய்தார்.
அப்போது நீதிபதி முத்துசாரதா கோயிலின் நைவேத்திய சமையல்கூடம் சுத்தமாக இல்லையெனவும், அபிஷேக நீர் வெளியேறும் வாருகால்களில் தண்ணீர் தேங்கி நிற்பது குறித்தும் கேள்வி  எழுப்பி அவற்றைச் சரி செய்ய உத்தரவிட்டார்.
மேலும் பக்தர்களின் கோரிக்கையின்படி கோயிலின் வெளிப்புற வளாகத்தின் தெற்குப்பகுதி வாசல் கதவைத் திறந்து வைக்கவும், கோயிலினுள் தேவையற்ற  பொருள்கள் சேர்வதைத் தடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது நீதிபதியின் அலுவலக உதவியாளர் மற்றும் அக்கோயிலின் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், உதவி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com