பட்டாசு ஆலைகளைத் திறக்கக்கோரி 24 இடங்களில் கஞ்சித் தொட்டிகள் திறப்பு: 700 பெண்கள் உட்பட 1050 பேர் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி அம்மாவட்டத்தில் சனிக்கிழமை 24 இடங்களில் கஞ்சித் தொட்டி திறந்து பட்டாசு மற்றும் தீப்பெட்டி


விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி அம்மாவட்டத்தில் சனிக்கிழமை 24 இடங்களில் கஞ்சித் தொட்டி திறந்து பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பட்டாசுத் தொழிலாளர்கள் 1,050 பேர் கலந்து கொண்டனர்.
பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும். பேரியம் நைட்ரேட் வேதிப் பொருள் பயன்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு உரிமையாளர்கள் 2018 நவம்பர் 13 முதல் பட்டாசு ஆலைகளை மூடி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், பட்டாசு உற்பத்திக்கு சுற்றுச்சூழல் சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் சனிக்கிழமை கஞ்சித்தொட்டி திறப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதில், 75 நாள்களுக்கு மேல் வேலையின்றி தவித்து வரும் பட்டாசு தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் திறமையான வழக்குரைஞர்களைக் கொண்டு வாதாடி பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்டத்தில் 24 இடங்களில் கஞ்சித்தொட்டி திறப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் 700 பெண்கள் உள்பட 1,050 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 
சிவகாசி: சிவகாசிப் பகுதியில் சிவகாமிபுரம் காலனி, முருகன் காலனி, செல்லைய நாயக்கன்பட்டி, மீனம்பட்டி, விஸ்வநத்தம், துரைச்சாமிபுரம், மாரனேரி ஆகிய 7 இடங்களில் கஞ்சித்தொட்டி திறப்பு போராட்டம் நடைபெற்றது. சிவகாமிபுரம் காலனியில் நடைபெற்ற போராட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா தலைமை வகித்தார். இதில் அச்சங்க மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி, துணைத்தலைவர் ஜெ.லாசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், நகரச் செயலாளர் கே.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
ஸ்ரீவில்லிபுத்தூர்: நாச்சியார்பட்டி, கூமாப்பட்டி பகுதிகளில் கஞ்சி தொட்டி திறக்கப்பட்டது. போராட்டத்திற்கு சாலை பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் எம்.திருமலை தலைமை வகித்தார். போராட்டத்தில் ஊர்த் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் சசிகுமார், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி பாண்டியன், வைரமுத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூமாப்பட்டியில் சரசுவதியம்மாள் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் மணிக்குமார் கஞ்சி தொட்டியை திறந்து வைத்தார். போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளார் ஜெயக்குமார் பேசினார்.
சாத்தூர்: சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம், தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், ராமலிங்காபுரம், அன்பின் நகரம், பனையடிபட்டி, மார்க்நாதபுரம், சல்வார்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்தனர். இதில் ஏராளமான பட்டாசு தொழிலாளர்களும், தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com