நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சேத விவரத்தை ஆய்வுசெய்து, மத்திய உள்துறை அமைச்சகம் மூலம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சேத விவரத்தை ஆய்வுசெய்து, மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  
கஜா புயலால் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில், நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்து, ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களை கடந்த 16-ஆம் தேதி, அதாவது புயல் பாதித்த 6 மணிநேரத்துக்குள், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களுக்கு உள்பட்ட நிவாரண முகாம்கள், பஞ்சாயத்துகள், ஊராட்சி ஒன்றியங்களை பார்வையிட்டதில், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விவசாய நிலங்கள், குறிப்பாக தென்னை மரங்கள் மொத்தமாக சாய்ந்திருப்பது தெரியவந்தது. நெற்பயிர்கள் நாசமாகியிருக்கின்றன. குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும் முழுமையாக சேதமடைந்திருக்கின்றன. 
திருத்துறைப்பூண்டி பகுதியில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி, வீடுகளை சரிசெய்யும் வரையில், அவர்கள் தங்குவதற்கான வசதியை தமிழக அரசு செய்து தர வேண்டும். மக்களின் குடிநீர், சுகாதாரம், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
இங்கு ஏற்பட்டிருக்கிற சேத விவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்து, உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
அப்போது, பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் பேட்டை சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com