அமைச்சர்களை முற்றுகையிட்ட இளைஞர்கள்: அதிமுகவினருடன் தள்ளுமுள்ளு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை புதன்கிழமை பார்வையிடச்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை புதன்கிழமை பார்வையிடச் சென்ற தமிழக அமைச்சர்களை முற்றுகையிட்ட இளைஞர்களை அதிமுகவினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கஜா புயல் காரணமாக, மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் உள்ளிட்ட மா, வாழை மரங்கள், நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் சேதமடைந்தன. நெடுஞ்சாலைக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான புளியமரம், ஆலமரம், அரசமரம் ஆகியவையும் வேரோடு சாய்ந்தன. மேலும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், மின் மாற்றிகள் முறிந்து விழுந்தன. இதனால், கடந்த 5 நாள்களாக மன்னார்குடி அதன் சுற்றுப்பகுதிகள் அனைத்தும் இருளில் மூழ்கியுள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு முதல் மன்னார்குடி  நகர பகுதியில் ஒருசில இடங்களில் மட்டும் மின்விநியோகம் செய்யப்பட்டது.
நகரின் மற்ற பகுதிக்கும், கிராமங்களிலும் 5 நாள்களாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால்  குடிசை பகுதிகளில் வசிப்பவர்கள்  பல்வேறு கிராமங்களில் அங்குள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குடிநீர் விநியேகம் முழுமையாக முடங்கியுள்ளது. இதையடுத்து, குடிநீர் வசதி செய்துத் தர வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசுத்துறையினர் யாரும் வந்து பார்க்கவில்லை எனக் கூறி, மன்னார்குடி மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி ஆகியோர், புதன்கிழமை அரசுத்துறை அலுவலர்களுடன், புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட காரில் சென்றனர்.
இலக்கணம்பேட்டை, சுந்தரக்கோட்டை, கண்டிதம்பேட்டை, கூப்பாச்சிக்கோட்டை ஆகிய இடங்களில் கிராம மக்கள் புயலால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தெரிவித்தனர். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பரவாக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் புயலால் பாதிக்கப்பட்டு,  முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களைப் பார்க்கச் சென்றபோது, அங்கிருந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் தாமதமாக சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட வந்தது ஏன் எனக் கேட்டு சப்தமிட்டனர். இதை அதிமுகவினர் கண்டித்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது.
பின்னர், அமைச்சர்கள் முகாமில் தங்கியுள்ளவர்களைப் பார்த்துவிட்டு வெளியே வந்து காரில் ஏற முயன்றபோது அவர்களை, இளைஞர்கள் முற்றுகையிட்டதால், அதிமுகவினருடன் அமைச்சர்கள் முன்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்புக்கு வந்த போலீஸார் அமைச்சர்களை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, உள்ளிக்கோட்டை பகுதிக்கு அமைச்சர்கள் வந்தபோது, தெற்கு தெருவில் அவர்கள் வந்த காரை அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மறித்து, புயல் பாதிப்பு நிகழ்ந்து 5 நாள்கள் கழித்து பார்வையிட வருவதா எனக் கேட்டு முற்றுகையிட்டனர். அவர்களை அமைச்சர்கள் சமாதானம் செய்து, குறைகள், பாதிப்புகள் நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்தனர். அங்கிருந்து  அமைச்சர் ஆர். காமராஜ்  மட்டும், கட்சியினர் ஒருவரின்  இருசக்கர வாகனத்தில் ஏறி, உள்ளிக்கோட்டை கடைவீதிக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து காரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அங்கு வந்து சேர்ந்தார்.
அங்கு திரண்டிருந்தவர்கள், செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றபோது, எங்களின் கோரிக்கையை கேட்க  அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் ஏன் வரவில்லை எனக் கேட்டனர். இதை அதிமுகவினர் தடுத்ததால்  அவர்களுடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.  பின்னர், அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டு மகாதேவப்பட்டணம், தளிக்கோட்டை, கருவாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com