சாலை மறியல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் மின் விநியோகம் செய்ய வலியுறுத்தி, மன்னார்குடி

குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் மின் விநியோகம் செய்ய வலியுறுத்தி, மன்னார்குடி பகுதியில் 3 இடங்களில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 
மன்னார்குடி- பட்டுக்கோட்டை பிரதான சாலை கண்டிதம்பேட்டையில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு ஜெனரேட்டர் மூலம்  நீரேற்றி குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மன்னார்குடி வட்டாட்சியர் ஸ்ரீதேவிசிவானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
அடுத்து, மன்னார்குடி நகரத்துக்குள்பட்ட மின்வாரிய குடியிருப்பு, மேலவாசலின் ஒரு பகுதிக்கு மட்டும் மின் விநியோகம் செய்யப்பட்டிருப்பதை போல மற்ற பகுதிகளுக்கும் பாராபட்சமின்றி மின் விநியோகம்  செய்ய வேண்டும்  என  கேரிக்கையை வலியுறுத்தி மன்னார்குடி- தஞ்சை பிரதானசாலை  மேலவாசலில் சாலை மறியல் போராட்டம்  நடைபெற்றது. இங்கு  காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டன. 
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு அலுவலர்கள் வராததை கண்டித்தும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் வழங்க கோரியும், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவலியுறுத்தியும், மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி பிரதானசாலை ஓவர்சேரி பேருந்து நிறுத்தம் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த மன்னார்குடி வட்டாட்சியர் ஸ்ரீதேவி சிவானந்தம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

அடிப்படை வசதிகள் கோரி...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தக் கோரி திருவாரூர் அருகே புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. 
கஜா புயலால் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மரங்கள், மின்கம்பங்கள் விழுந்ததால் பல்வேறு கிராமங்களில் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, குடிநீர் வசதி செய்து தரவேண்டும், மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாள்தோறும் ஆங்காங்கே சாலை மறியல் நடைபெற்று வருகிறது. 
அந்த வகையில், நாகை சாலையில் அடியக்கமங்கலம் மேட்டுத்தெரு, ஆண்டிப்பாளையம் பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதேபோல், திருத்துறைப்பூண்டி சாலையில் மாங்குடி, திருக்கரவாசல் அண்ணா மன்றம், கோமல் உள்ளிட்ட இடங்களிலும் சாலை மறியல் நடைபெற்றது. மறியல் நடைபெற்ற இடங்களில் வருவாய்த் துறை அலுவலர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com