பாமணி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

சம்பா சாகுபடிக்கு பாமணி ஆற்றிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை

சம்பா சாகுபடிக்கு பாமணி ஆற்றிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த பெருகவாழ்ந்தானில் விவசாயிகள் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனர். 
பெருகவாழ்ந்தானை அடுத்த சித்தமல்லி, கர்ணாவூர், பாலவாய்க்கால், செருகளத்தூர், வடக்குவெளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில், பாமணியாற்றின் பிரிவு வாய்க்காலான தெக்கெடுத்தான் வாய்க்கால் மூலம் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த வாய்க்காலில் தினசரி 140 கனஅடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். ஆனால், 88 கனஅடி தான் திறந்துவிடப்படுகிறதாம். இதனால், விவசாயிகள் தற்போது மேற்கொண்டுள்ள நேரடி நெல் விதைப்பு மற்றும் சம்பா இளம் நாற்றுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல், வயல்கள் வறண்டுபோய் காட்சியளிக்கின்றன. பயிர்கள் காயும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பா சாகுபடியைப் பாதுகாத்திடும் வகையில், பாமணி ஆற்றிலிருந்து கூடுதலானல் தண்ணீரை பாசன வாய்க்காலில் திறந்துவிட வலியுறுத்தி, மன்னார்குடி- முத்துப்பேட்டை பிரதான சாலையில், பெருகவாழ்ந்தான் பாமணியாறு அணையடி அருகே விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மன்னார்குடியைச் சேர்ந்த காவிரி எஸ். ரெங்கநாதன், சித்தமல்லி அண்ணாதுரை, புத்தகரம் ஜெயக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். தகவலறிந்து வந்த வெண்ணாறு கோட்ட செயற்பொறியாளர் இளங்கோவன், பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளர் சுப்ரியா ஆகியோர் பேச்சவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், சுமார் ஒரு மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து காவிரி எஸ். ரெங்கநாதன் செய்தியாளர்களிடம் கூறியது:
பாமணியாற்றின் மூலம் தற்போது நடைபெற்று வரும் சாகுபடி பரப்பளவின் அளவைப் பொதுப்பணித்துறை தவறாகக் கணக்கிட்டுள்ளது. பாமணியாற்றின் முழு கொள்ளவுக்கு தண்ணீர் திறந்து விட்டால்தான், தற்போது ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும். குறைந்தபட்சம் இரண்டு வார காலமாவது இடைவிடாமல், ஆற்றின் முழு கொள்ளவுக்கு தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com