"திருவாரூர் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனை இலக்கு ரூ. 2.25 கோடி'

திருவாரூர் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனை இலக்கு ரூ. 2.25 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறினார்.

திருவாரூர் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனை இலக்கு ரூ. 2.25 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறினார்.
திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2018 சிறப்பு விற்பனையை வியாழக்கிழமை தொடங்கி வைத்து அவர் தெரிவித்தது:
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 83 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து, நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. காலத்துக்கேற்ற வகையில் பல புதிய வடிவமைப்புகளில், கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டுப் புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூரைடு புடவைகள், திருபுவனம் பட்டு சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏரளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.11 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டில், ரூ. 13 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி 2017-ல் ரூ.1.78 கோடி விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி சிறப்பு விற்பனை 2018-க்கு ரூ.2.25 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் விற்பனை நிலையத்தில் 2017- ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனையில் ரூ.34.11 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது 2018-ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனைக்கு ரூ.50 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், கனவு நனவு திட்டம் என்ற சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை, வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 ஆவது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீதம்  தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது என்றார். 
நிகழ்ச்சியில், வருவாய்க் கோட்டாட்சியர் முருகதாஸ், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சு. மாணிக்கம், துணை மண்டல மேலாளர் (தணிக்கை) மு. அன்பழகன், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com