ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் கருணாநிதி

ஓய்வு எடுக்கச் சொன்னால்கூட ஓய்வு எடுக்காமல் ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் கருணாநிதி என திருவாரூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில்

ஓய்வு எடுக்கச் சொன்னால்கூட ஓய்வு எடுக்காமல் ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் கருணாநிதி என திருவாரூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் அவருக்கு புகழாரம் சூட்டப்பட்டது.
திமுக சார்பில் கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்துக்கு, மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தார். கீழ்வேளுர் சட்டப் பேரவை உறுப்பினர் உ. மதிவாணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளர்கள் சுந்தர ஆவுடையப்பன், மனுஷ்யபுத்திரன், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று, கருணாநிதியின் இலக்கிய வளம், அரசியல் புலம், ஆளுமை தன்மை ஆகியவை குறித்து பேசினர்.
இதில் திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவை உறுப்பினர் ஆடலரசன், நாகை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், சுந்தர ஆவுடையப்பன் பேசியது: தந்தையின் கடமையை ஒரு தனயன் மட்டுமே செய்ய வேண்டும் என்றவர் கருணாநிதி. அவர் சாதாரண தந்தையல்ல. போராடக்கூடிய தொண்டர்களைக் கொண்ட கழகத்தின் தலைவராக இருந்தவர். அந்த கழகத்தை தாங்கிப் பிடிக்கக்கூடிய தனயனாகவும், தந்தை வழியில் வியக்கத்தக்க திட்டங்களைத் தரக்கூடியவராகவும் இருக்க வேண்டும்.
மனுஷ்யபுத்திரன்: சொந்த ஊரிலும், வீட்டிலும் தீர்க்கத்தரிசி யாரும் புகழ் அடைய முடியாது. ஆனால், சொந்த ஊரில் புகழடைந்த ஒரே தலைவர் கருணாநிதி. அவர் திருவாரூருக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே மண்ணின் மைந்தர். அவரது புகழை உலக அரங்குக்கு கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை.
பட்டிமன்ற பேச்சாளர் ராஜா: கருணாநிதி முதல்வராக இருந்தபோது, காலை 4.30 மணிக்கு எழுந்து பத்திரிகைகளை முழுமையாக படித்து விட்டு காலை 6 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களை எழுப்பி பத்திரிகைகளில் வந்த குறைகள் குறித்து கேட்டறிவார் என்பது அனைவரும் அறிந்தது. உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு இருந்தபோதுகூட சட்ட சபை நிகழ்வுகளை கண்காணித்து உரிய அறிவுரை வழங்கியவர்.
ஓய்வு எடுக்கச் சொன்னால்கூட ஓய்வு எடுக்காமல் ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் கருணாநிதி. நீதியை மதிக்கக் கூடியவர். அவரைப்போல பணியாற்றி, அவர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே அவருக்கு கொடுக்கும் புகழஞ்சலி என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com