மத்தியப் பல்கலை மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது

திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து வந்த மாணவர்களின் போராட்டம் துணைவேந்தர்

திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து வந்த மாணவர்களின் போராட்டம் துணைவேந்தர் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவுக்கு கொண்டு வந்தார். 
திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் ஆங்கிலத் துறையில் இரண்டு தற்காலிக ஆங்கில பேராசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதுடன், மாணவர்கள் தங்கும் விடுதிகளை கவனிக்கும் பொறுப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில், அந்த பேராசிரியர்கள் சில நேரங்களில் மாணவர்கள் நியாயமான காரணங்களை கூறி தாமதமாக வரும்போது மனிதாபிமான அடிப்படையில் விடுதிக்குள் அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதற்காக அந்த பேராசிரியர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு ஒப்பந்த அடிப்படையிலான ஆங்கில பேராசிரியர் பணியை ரத்து செய்து பணியிலிருந்து நீக்கியது.
இதையறிந்த மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்த நிலையில், பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர். 
அப்போது, பல்கலைக்கழக நிர்வாகம் பதிவாளர் தலைமையில் மாணவர்களிடம் பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியூர் சென்றிருப்பதால் அவர் வந்தவுடன் பிரச்னை குறித்து பேசிக்கொள்ளலாம், எனவே, போராட்டத்தை கைவிடுங்கள் என்று பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும், மாணவர்கள் பல்கலைக் கழக நிர்வாகத்தின் பேச்சுவார்த்தையியில் திருப்தி அடையாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். பிப்ரவரி 16,17 விடுமுறை நாள் என்பதால் திங்கள்கிழமை (பிப்ரவரி 18) பல்கலைக்கழகம் செயல்பட தொடங்கியதும் மாணவர்களும் போராட்டத்தை தொடர்ந்தனர். 
இந்நிலையில், வெளியூர் சென்றிருந்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஏ.பி. தாஸ் மாணவர்களின் போராட்டத்தை அறிந்து உடனடியாக பல்கலைக்கழகத்துக்கு திரும்பினார். இதற்கிடையில், செவ்வாய்க்கிழமையும் மாணவர்களின்  போராட்டம் தொடர்ந்த நிலையில், அவர்களிடம் துணைவேந்தர் ஏ.பி. தாஸ் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் குறித்து நியாயமான முறையில் பரிசீலிக்கப்படும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது, மாணவர்கள் விரும்பியது போல் ஒரு குழு அமைத்து பிரச்னை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். 
இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை விலக்கிக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, துணைவேந்தர் ஏ.பி. தாஸ் அனைத்துத் துறை மாணவர்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, மாணவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்க புவியியல் துறை தலைவரின் தலைமையில் புதன்கிழமை ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com