நல்ல சிந்தனைகளை மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்: கவிஞர் விவேகா

நல்ல சிந்தனைகளை மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் மு. விவேகா தெரிவித்தார்.


நல்ல சிந்தனைகளை மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் மு. விவேகா தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் 35-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் மு. விவேகா கலந்துகொண்டு பேசியது:
மாணவர்களை பல்வேறு வகைகளிலும் சிறந்த முறையில் உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். நல்ல சிந்தனைகளை மாணவர்களின் மனதில் ஆசிரியர்கள் பதிய வைக்க வேண்டும். தாய், தந்தையை மாணவர்கள் மதிக்க வேண்டும். தாய் அன்புக்கு இணையாக உலகில் வேறு எதுவும் இல்லை.
மாணவர்கள் தாய்மொழிக் கல்வி வாயிலாக வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு பல்கலைக்கழகம். ஒவ்வொருவரிடமும் பல்வேறு விஷயங்கள் உள்ளன. தினந்தோறும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். உலகில் நான்தான் பெரியவன் என்பதும், தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதும் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என்றார் மு. விவேகா.
நிகழ்ச்சியில், கும்பகோணம் எம்எல்ஏ க. அன்பழகன் பேசியது: ஓர் ஊரில் கோயில் கட்டினால் இந்துக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். தேவாலயம் கட்டினால், கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். மசூதி கட்டினால், முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். சமணக் கோயிலைக் கட்டினால், சமணர்கள் மகிழ்வர்.
அதே ஊரில் பள்ளிக்கூடம் கட்டினால், அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சி ஏற்படும். சிறந்த ஆசிரியர்களால்தான் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைகிறார்கள். மாணவர்கள் நேரத்தை வீணடிக்கக் கூடாது. உழைத்தால்தான் வாழ்வில் முன்னேற முடியும். வாழ்வில் எவ்வளவு உயரத்தை அடைந்தாலும், பெற்றோர்களையும், உடன்பிறந்த சகோதர, சகோதரிகளையும், உறவினர்களையும் மறக்காமல் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், அரசுப் பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
விழாவுக்கு, பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர். ராஜசேகரன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் எஸ். நடராஜன், மூத்த முதல்வர் சுகுணவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி நிர்வாக இயக்குநர் எம். விக்னேஷ் வரவேற்றார். பள்ளி செயலாளர் என். அநிரூபிதா அறிமுகவுரையாற்றினார். பள்ளி முதல்வர் ஜெ. செல்வம் ஆண்டறிக்கை வாசித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் என். கோவிந்தராஜன், துணைத் தலைவர் வி. ராஜகோபால் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். ஆசிரியர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com