பட்டாசுக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு எதிரொலி: கடந்த ஆண்டைவிட நிகழாண்டு ஒலி மாசு குறைந்தது

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டு தீபாவளி பட்டாசால்

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டு தீபாவளி பட்டாசால் ஒலி மாசு ஓரளவு குறைந்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தீபாவளி பட்டாசால் மாசு அதிகரிப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நிகழாண்டில் இந்தியா முழுவதும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய தென்மாநிலங்களில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானித்துக்கொள்ள விதிவிலக்கு அளித்தது. இந்நிலையில், தமிழக அரசு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதியளித்தது.
15 நாள்கள் கணக்கீடு: இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியது: தீபாவளியன்று காற்று, ஒலி மாசுவை கண்டறிய சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களில் ஆண்டுதோறும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 
நிகழாண்டில் உச்சநீதிமன்ற உத்தரவின் காரணமாக அனைத்து நகரங்களிலும் தீபாவளிக்கு முந்தைய 7 நாள்களும், பிந்தைய 7 நாள்களும் என மொத்தம் 15 நாள்கள் ஒலி மற்றும் காற்றின் மாசு அளவைக் கணக்கிட்டு அறிக்கை அளிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் உத்தரவிடப்பட்டது.
அதன்படி, திருநெல்வேலி மாநகரத்தில் வண்ணார்பேட்டை, பேட்டை ஆகிய இடங்களில் சோதனை நடந்தது. ஒலி மாசு மற்றும் காற்று மாசு அதிகரித்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகரப் பகுதிகளில் குடியிருப்புகளில் 50 டெசிபல் அளவும், வணிக பகுதிகளில் 55 டெசிபல் அளவும், தொழிற்சாலை பகுதிகளில் 70 டெசிபல் அளவும் ஒலி மாசு இருப்பது இயல்பான நிலையாகும். ஆனால், தீபாவளி நாளில் அரசால் அனுமதிக்கப்பட்ட இரவு 7 முதல் 8 மணி வரை குடியிருப்பு பகுதிகளில் அதிகபட்சமாக 70 டெசிபல் வரை ஒலிமாசு ஏற்பட்டுள்ளது. 
இதேபோல காற்றின் மாசு அதிகபட்சமாக 120 மைக்ரோ கிராமாக அதிகரித்தது. இரவு 8 மணிக்கு பின்பு ஒலி மாசு இயல்பு நிலையை அடைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் 8 முதல் நள்ளிரவு 12 மணி வரை ஒலி மாசு அதிகமாக காணப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஒலி மாசு ஓரளவு குறைந்துள்ளது என்றனர்.
விழிப்புணர்வு அவசியம்: இதுகுறித்து காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் ஒருவர் கூறியது: இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கார்பன்-டை ஆக்ஸைடு வெளியேற்றம், காற்று மாசு போன்றவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மாசு இல்லாத காற்று என்பதை காற்றில் உள்ள மிதக்கும் துகள்கள் மூலம் கணக்கிடுகிறார்கள். 10 மைக்ரானுக்கு கீழ் உள்ள மிதக்கும் துகள்களே சுவாசத்தின் மூலம் மனிதனின் மூச்சுக் குழாய் வழியாக சென்று உடல் உறுப்புகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இதேபோல ஒலியின் அளவானது பகல் நேரத்தில் (காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை) 55 டெசிபல் அளவில் இருக்க வேண்டும். இரவு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை) 45 டெசிபல் என்ற அளவில் இருக்க வேண்டும். 
இந்த அளவைவிட கூடுதலாகும் தருணத்தில் மனிதர்களுக்கு செவிக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஒலி மாசு, காற்று மாசு போன்றவற்றின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே விளக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com