விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ராஜபாளையம்-செங்கோட்டை நான்குவழிச் சாலைக்கு எதிர்ப்பு

ராஜபாளையம்-செங்கோட்டை நான்குவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

ராஜபாளையம்-செங்கோட்டை நான்குவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குநர் அ. பழனி, சேரன்மகாதேவி சார்ஆட்சியர் ஆகாஷ், வேளாண்மை இணை இயக்குநர் செந்திவேல்முருகன், திருநெல்வேலி கோட்டாட்சியர் மணீஷ் நாரணவரே உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:
விவசாயிகள்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் ராஜபாளையம்-செங்கோட்டை இடையே பாரத் மாலா திட்டத்தின் மூலம் நான்குவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சிவகிரி, கடையநல்லூர், செங்கோட்டை வட்டங்களில் 23 வருவாய் கிராமங்களில் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை காரணமாக ஏராளமான விளைநிலங்களும், தோட்டப்பயிர்களும் சேதமாகும் அபாயம் உள்ளது. எனவே, இத்திட்டத்தைக் கைவிடவோ அல்லது மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியர்: நான்குவழிச் சாலை திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் அளித்துள்ள மனு மற்றும் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும்.
விவசாயிகள்: கார் பருவ சாகுபடி முடிந்து நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் வாங்கப்பட்ட நெல் மூட்டைகள் களத்துமேடுகளில் ஆயிரக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மழைக்கு முன்பு அப்புறப்படுத்தாவிட்டால் பெருமளவு பாதிக்கும் அபாயம் உள்ளது.
ஆட்சியர்: நெல்மூட்டைகளைப் பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும்.
விவசாயிகள்: கரும்புக்கான நிலுவைத்தொகையை தனியார் கரும்பு ஆலையிடம் இருந்து பெற்றுக் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வழங்குவதாகக் கூறிவிட்டு, இதுவரை நிலுவையை வழங்காமல் உள்ளதால், பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம்.
ஆட்சியர்: ஆலை நிர்வாகத்திடம் பேசி இன்னும் ஒரு மாதத்தில் நிலுவைத்தொகையைப் பெற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள்: சேனைக்கிழங்கு, சிறுகிழங்கு, கருணைக்கிழங்கு உள்ளிட்ட கிழங்கு வகைகளுக்கு உரிய விலை பெற முடியாமல், மொத்த வியாபாரிகளிடம் மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. எனவே, உரிய விலை கிடைக்க கூட்டுறவுத்துறை மூலம் இவற்றை கொள்முதல் செய்ய வேண்டும்.
அதிகாரிகள்: கூட்டுறவுத் துறை மூலம் கிழங்கு வகைகளை கொள்முதல் செய்வது அரசின் கொள்கை முடிவாகும். அதேநேரத்தில், விவசாயிகள் உழவர் சந்தைகளில் அடையாள அட்டைகள் பெற்று நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள்: கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்ப்பாசன சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. அதை உடனே நடத்த வேண்டும் அல்லது தற்காலிக பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்.
அதிகாரிகள்: நீர்ப்பாசன சங்கங்களுக்கான உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com