ஆடு வளர்ப்போருக்கு பிரத்யேக செயலி விரைவில் அறிமுகம்!

வெள்ளாடு, செம்மறியாடு வளர்ப்போருக்கான பிரத்யேக செல்லிடப்பேசி செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


வெள்ளாடு, செம்மறியாடு வளர்ப்போருக்கான பிரத்யேக செல்லிடப்பேசி செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகளுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் வகையில் வெள்ளாடு, செம்மறியாடு வளர்ப்போருக்கான பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
19-ஆவது கால்நடை கணக்கெடுப்பின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 3,03,105 செம்மறியாடு, 3,30,230 வெள்ளாடுகள் உள்ளன. ஆடு வளர்ப்புத் தொழில் திருநெல்வேலி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. அதைக் கருத்தில் கொண்டு திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியரான சே.செந்தில்குமார் (செயலியின் முதன்மை ஆராய்ச்சியாளர் ), சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் சி.மணிவண்ணன், சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சு.சுரேஷ் கண்ணன் (இருவரும் இணை ஆராய்ச்சியாளர்கள்) ஆகியோர் இணைந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளனர்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் (ரூ.6.44 லட்சம் ) இந்த செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த செயலியை உருவாக்குவதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆடு வளர்ப்பவர்கள் 100 பேரிடமும், கால்நடை விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ள 60 பேரிடமும், கால்நடை மருத்துவக் கல்லூரி தொழில்நுட்ப நிபுணர்கள்40 பேரிடமும் ஆடு வளர்ப்புத் தொழிலுக்கு தேவையான தகவல்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
அதன்படி ஆட்டினங்கள், இனப்பெருக்கம் பற்றிய தகவல், தீவன மேலாண்மை குறித்த தகவல், பராமரிப்பு பற்றிய தகவல், நோய்த் தடுப்பு பற்றிய தகவல், பொருளாதார மற்றும் விற்பனை வாய்ப்பு பற்றிய தகவல் ஆகியவை சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்ப நிபுணர்களின் ஆலோசனைப்படி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆடு வளர்ப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தெரிந்து கொள்ளும் வகையில் ஆன்ட்ராய்டு தளம் மூலம் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
ஏராளமான தகவல்கள்: இது தொடர்பாக முதன்மை ஆராய்ச்சியாளரும், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இணைப் பேராசிரியருமான சே.செந்தில்குமார் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளின் அடிப்படையில் இந்த பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டிருந்தாலும், இது பயன்பாட்டுக்கு வரும்போது இந்தியாவில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து ஆடு வளர்ப்போருக்குமான தகவல்களை உள்ளடக்கியதாகவே இருக்கும்.
மாவட்டத்தில் உள்ள முன்னோடி விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டு, தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆலோசனைப்படி இந்த செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த செயலியில் இனப்பெருக்கம், தீவன பராமரிப்பு, நோய்த் தடுப்பு, ஆடுகள் விற்பனை, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சந்தைகளின் விவரம் மற்றும் அவை செயல்படும் நாள்களின் விவரம், விற்பனை வழிமுறை, ஆடுகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆட்டிறைச்சிக் கூடம்: இதேபோல் ஆட்டிறைச்சிக் கூடம் நடத்துபவர்களுக்கு உதவும் வகையில் நவீன இறைச்சிக்கூடம் மற்றும் அதில் இருக்க வேண்டிய வசதிகள் குறித்த விவரம், மதிப்புக்கூட்டப்பட்ட இறைச்சி பொருள்கள் தயாரிப்பது குறித்த விவரம், வெள்ளாட்டின் பால் சத்து பற்றிய விவரம், தோல் சந்தை நிலவரம், ஆடுகளின் எலும்பை பயன்படுத்தி கோழி தீவனம் தயாரிப்பது, கொம்பு, குழம்பு போன்ற உறுப்புகளை பயன்படுத்தி ஆபரணங்கள் தயாரிப்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
எந்த சந்தையில் என்னென்ன ஆடுகள் விற்பனைக்கு வரும், வங்கிக் கடன் பெறுவது, காப்பீடு செய்வது, பொருளாதார கணக்கு பட்டியல் தயார் செய்வது, நுண்ணுயிரி, நச்சுயிரி, ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய்கள், செரிமான கோளாறு, தடுப்பூசி கால அட்டவணை, குடற்புழு நீக்க கால அட்டவணை, அவசர கால முதலுதவி, மரபுசார் மூலிகை மருந்துகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
எச்சரிக்கை அறிவிப்புகள்: இதேபோல் மழை மற்றும் வெயில் காலங்களில் ஏற்படக்கூடிய நோய்கள் மற்றும் அதற்கான தடுப்பூசி குறித்த விவரங்கள் செயலியின் மேல் பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பாக இடம்பெறும். திடீரென ஏதாவது நோய் பரவினாலும், அது தொடர்பான அறிகுறிகள், தடுப்பு முறைகள் குறித்த விவரமும் செயலியில் எச்சரிக்கை அறிவிப்பாக இடம்பெறும். இதேபோல் செரிமானக் கோளாறு, நச்சு, தீப்புண், பாம்புக் கடி, மின் அதிர்ச்சியால் ஆடுகள் பாதிக்கப்படும்போது செய்ய வேண்டிய சிகிச்சைகள் குறித்தும், நாட்டு மருந்துகள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர கேள்வி-பதில் நேரமும் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது. ஆன்லைனில் கேள்வி நேரமானது அலுவலக நாள்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை ஆகும். இதேபோல் ஆஃப்லைன் மூலமாகவும் கேள்விகளை கேட்கலாம். நோய் தொடர்பாக கேள்வி கேட்பவர்கள் பாதிக்கப்பட்ட ஆடுகளின் விடியோக்களையும் பதிவேற்றம் செய்யலாம். அப்படி செய்யும்போது தீர்வு சொல்வது இன்னும் எளிதாக இருக்கும்.
மருத்துவர்களின் எண்கள்: இதுதவிர கால்நடைத் துறை அதிகாரிகள், மருத்துவர்களின் தொலைபேசி எண்கள், கால்நடை மருத்துவமனை, மருந்தகங்களின் விவரங்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் இரவு நேரங்களிலோ, கால்நடை மருத்துவமனை இல்லாத ஊரகப் பகுதிகளிலோ ஆடுகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட விவசாயிகள் மருத்துவரை தொடர்பு கொண்டு முதலுதவி அளிக்க முடியும்.
இந்த செயலியைப் பொறுத்தவரையில் தமிழில் அனைத்து வகையான தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன. ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன் 30 வெள்ளாடு வளர்ப்பவர்கள், 30 செம்மறியாடு வளர்ப்பவர்கள், 30 மருத்துவர்கள் அழைக்கப்பட்டு, அவர்களிடம் செயலியின் செயல்பாடு குறித்து விளக்கப்படும். அதன்பிறகு அவர்களின் கருத்தை கேட்டு தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.
கட்செவி அஞ்சல் குழு: பின்னர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அறிமுகம் செய்யப்படும். வரும் மார்ச் மாதத்தில் இந்த செயலியை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த செயலியை தரவிறக்கம் செய்யும்போது எங்களுடைய கட்செவி அஞ்சல் குழுவிலும் இடம்பெறலாம். அதன்மூலமும் பல்வேறு சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என்றார்.
இந்தியாவிலேயே முதல்முறையாக ஆடு வளர்ப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே ஆடு வளர்ப்பவர்களுக்கு மட்டுமின்றி, புதிதாக ஆட்டுப் பண்ணை தொடங்க விரும்பும் இளம் தொழில்முனைவோருக்கும் இந்த செயலி உதவியாக இருக்கும். இதுவரையில் புதிதாக ஆட்டுப் பண்ணை தொடங்குபவர்கள் ஏதாவது பண்ணைகளில் கட்டணம் செலுத்தியோ அல்லது இணையதளங்களில் நீண்ட தேடல்களின் மூலமோ தகவல்களை பெற்றிருப்பார்கள். ஆடு வளர்ப்போருக்கான பிரத்யேக செயலி பயன்பாட்டுக்கு வரும்போது, வீட்டில் இருந்தபடியே செல்லிடப்பேசியின் மூலமாகவே அனைத்து தகவல்களையும் இளம் தொழில்முனைவோர்களும், விவசாயிகளும் தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com