தேவேந்திரகுல வேளாளர்களை தலித் என அடையாளப்படுத்தக் கூடாது

தேவேந்திர குல வேளாளர்களை தலித் என்றோ, ஆதிதிராவிடர்கள் என்றோ அடையாளப்படுத்தக் கூடாது என, 

தேவேந்திர குல வேளாளர்களை தலித் என்றோ, ஆதிதிராவிடர்கள் என்றோ அடையாளப்படுத்தக் கூடாது என, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
திருச்சியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெறவுள்ள இளைஞரணி முதல் மாநாடு குறித்து கட்சி நிர்வாகிளிடம் ஆலோசனை நடத்த அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ஞாயிற்றுக்கிழமை சங்கரன்கோவில் வந்தார். அப்போது அவர் பயணியர் விடுதியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 
புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி முதல் மாநில மாநாடு திருச்சியில் அக். 6ஆம் தேதி நடைபெறுகிறது. தேவேந்திர குல வேளாளர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் தலித் என்றோ, ஆதிதிராவிடர் என்றோ, எஸ்.சி. என்றோ அடையாளப்படுத்தக் கூடாது.
 அந்த மக்களுடைய மரபு வழி, பண்பாட்டு வழி, வரலாற்றுரீதியான அடையாளமாகிய தேவேந்திரகுல வேளாளர் என்று மட்டுமே அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும். மேலும், இப்போது அவர்கள் இடம்பெற்றிருக்கிற பட்டியல் பிரிவில் இருந்து விலக்கி, ஓ.பி.சி. என்று அழைக்கப்படுகிற இதர பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். இந்த இரண்டு மிக முக்கிய கோரிக்கைகள்தான் மாநாட்டில் வலியுறுத்தப்படும்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியின் உறுப்புக் கல்லூரி சங்கரன்கோவிலில் இயங்கி வருகிறது. சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கல்வி கற்க மாணவர்கள் வருகின்றனர். இக்கல்லூரியை போக்குவரத்து வசதியில்லாத ஒரு கிராமத்திற்கு மாற்றுவது கண்டிக்கத்தக்கது. கல்லூரியை இடமாற்றம் செய்யக் கூடாது. புதிய தமிழகம் தேர்தல் பணி, சமூகப் பணி எனப் பிரித்துப் பார்ப்பது இல்லை. சமூக விடுதலைக்கான பணியில் ஈடுபட்டு வருகிறது என்றார் அவர்.
பேட்டியின்போது திருநெல்வேலி மாவட்டச் செயலர் இன்பராஜ், விருதுநகர் மாவட்டச் செயலர் ராஜலிங்கம், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மன்சூர்அலி ஆகியோர் உடனிருந்தனர்.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com