இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு வழிகாட்டியது திருக்குறள்: பழ.நெடுமாறன் பேச்சு

இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு திருக்குறளின் அறவழிதான் வழிகாட்டியாக இருந்தது என்று உலகத் தமிழர்

இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு திருக்குறளின் அறவழிதான் வழிகாட்டியாக இருந்தது என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.
கடையம் திருவள்ளுவர் கழக வெள்ளி விழாவை முன்னிட்டு இரண்டு நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சிக்கு கழகச் செயலர் அறிவரசன் தலைமை வகித்தார். இலஞ்சி ஜெயபாலன் மங்கள இசை வாசித்தார். தென்காசி திருவள்ளுவர் கழகச் செயலர் ஆ.சிவராமகிருஷ்ணன், மருத்துவர் பரமசிவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில் கடையம் வட்டாரப் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. தேசிய அளவில் ஸ்கேட்டிங் போட்டியில் முதல் இடம் பிடித்த கார்த்திக் தீபனுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. பழ.நெடுமாறனுக்கு "குறள்நெறிக் கோமான்' விருது வழங்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து வெள்ளி விழா மலரை பழ.நெடுமாறன் வெளியிட்டார். சூலூர் பாவேந்தர் பேரவைச் செயலர் புலவர் செந்தலை ந. கவுதமன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பழ.நெடுமாறன் பேசியது: திருக்குறளின் உண்மையான பெயர் என்ன என்ற ஒரு கேள்வி நிலவி வருகிறது. திருக்குறளுக்கு 20-க்கும் மேற்பட்ட பெயர்கள் வழங்கி வருகின்றன. வள்ளுவரே தமது நூலுக்குப் பெயர் சூட்டியிருக்க மாட்டார். பிற்காலத்தில் வந்தவர்கள் குறள் வெண்பாவினால் எழுதப்பட்ட அந்த நூலுக்கு திரு அடைமொழி சேர்த்து திருக்குறள் என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும்.
வடமொழித் தாக்குதலிலிருந்து தமிழைக் காக்க தொல்காப்பியர் இலக்கணம் படைத்தார். அதைப் போல் வடமொழிப் படையெடுப்பிலிருந்து தமிழ்ப் பண்பாட்டைக் காப்பதற்கு திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு நூல்கள் அனைத்தும் ஒரே புலவரால் பாடப்பட்டவையல்ல. ஆனால் 1,330 அருங்குறளை திருவள்ளுவர் ஒருவரே பாடி நிறைவு செய்துள்ளார்.
1,330 குறட்பாக்களில் ஓர் இடத்தில்கூட தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற சொல்லை திருவள்ளுவர் பயன்படுத்தவில்லை. உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான அறநெறிகளை அவர் தொகுத்துச் சொன்னார். மன்னராட்சிக் காலத்தில் அவர் கூறிய அரசியல் அறம், குடியாட்சிக்கும் பொருந்தும்.தமிழ் இலக்கியத்தில் முதல் புரட்சிப் புலவர் திருவள்ளுவர்தான். அவர் தமது காலத்தில் நிலவிய சீர்கேடுகளைக் கடுமையாகச் சாடினார்.
திருக்குறளை ஆங்கிலத்தில் ஜி.யு. போப் மொழிபெயர்த்தது, உலகமெலாம் பரவ உதவியது. திருக்குறளை ரஷிய எழுத்தாளர் டால்ஸ்டாய் ஏற்றுக் கொண்டு அது கூறிய அறவழியில் நடந்தார். டால்ஸ்டாயை வழிகாட்டியாகக் கொண்டவர் காந்தியடிகள். எனவே, இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு திருவள்ளுவரின் அறவழிதான் வழிகாட்டியது என்றார்.
நிகழ்ச்சியில் கடையம் திருவள்ளுவர் கழகத் தலைவர் ஆ.சேதுராமலிங்கம், பொருளாளர் இந்திரஜித், இணைச் செயலர் கோபால், ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகச் செயலர் கு.ம. சங்கரநாராயணன், அம்பை தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் வெள்ளைச்சாமி, செயலர் லெட்சுமணன், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கழகத் துணைத் தலைவர் க.சோ. கல்யாணி சிவகாமிநாதன் வரவேற்றார். துணைத் தலைவர் மு.அ.சித்திக் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com