நெகிழிக்கு தடை எதிரொலி: ஓலைப் பெட்டி முடையும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமா?

நெகிழிக்கு தடையைத் தொடர்ந்து தங்கள் தொழிலுக்கு மறுவாழ்வு கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர் பனை ஓலையில் பெட்டி முடையும் தொழிலாளர்கள்.

நெகிழிக்கு தடையைத் தொடர்ந்து தங்கள் தொழிலுக்கு மறுவாழ்வு கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர் பனை ஓலையில் பெட்டி முடையும் தொழிலாளர்கள்.
ஒரு காலத்தில் இனிப்பு கடைகளில் தொடங்கி இரும்புக் கடை வரை பனை ஓலைப் பெட்டிகள்தான் புழக்கத்தில் இருந்தன. அதனால் பனை ஓலையில் பெட்டிகள் முடையும் தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்தன. ஆனால் நெகிழி பொருள்களின் வருகையைத் தொடர்ந்து ஓலைப் பெட்டிகளுக்கு இருந்த வரவேற்பு குறைய ஆரம்பித்தது. நெகிழி பொருள்கள்,  பைகளில் தொடங்கி பல்வேறு வடிவங்களில் ஆதிக்கம் செலுத்தவே, பனை ஓலையில் பெட்டி முடையும் தொழில் நசிந்தது. அதை நம்பி வாழ்ந்த குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தன. பல தலைமுறைகளாக பெட்டி முடைவதை மட்டுமே நம்பி வாழ்ந்த அந்தக் குடும்பங்கள், ஆரம்பத்தில் வேறு தொழிலுக்கு செல்ல முடியாமல் தவித்தபோதிலும், நாளடைவில் கட்டட வேலை உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்தன. 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஓலைப் பெட்டி முடைந்த தெருக்களில், இப்போது ஒருசிலரைத் தவிர வேறு யாருமே அந்தத் தொழிலில் ஈடுபடவில்லை. சில கடைக்காரர்கள் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்ததால், மிகச் சில குடும்பங்கள் மட்டுமே தங்களின் குடும்பத் தொழிலை விட்டு வெளியேறாமல் இன்னும் ஓலைப் பெட்டியை முடைந்து வருகின்றன.
தற்போது நெகிழி பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், மீண்டும் ஓலைப் பெட்டி முடையும் தொழில் சூடுபிடிக்காதா? தங்களுக்கு மறுவாழ்வு கிடைக்காதா என ஏங்குகிறார்கள் ஓலைப் பெட்டி முடையும் சமூகத்தினர்.
300 குடும்பத்தை முடக்கிய நெகிழி: இது தொடர்பாக திருநெல்வேலியை அடுத்த பேட்டை செக்கடி கடசர் தெருவில் ஓலைப்பெட்டி முடைந்து வரும் லெட்சுமணன் கூறியதாவது: எங்கள் குடும்பம் ஆறேழு தலைமுறைகளாக பனை ஓலையில் பெட்டி முடையும் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறது. ஒரு காலத்தில் இந்தத் தெரு முழுவதும் பெட்டி முடையும் தொழில் அமோகமாக நடைபெற்று வந்தது. சுமார் 300 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தன. ஆனால் நெகிழி பொருள்களின் வருகைக்குப் பிறகு எங்கள் தொழிலுக்கு சிக்கல் ஏற்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் எங்கள் தொழில் பின்னடைவை சந்தித்ததால், பல குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கின. அதனால் வேறு வழியின்றி கட்டடப் பணி, கூலி வேலை என வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர்.
எனக்கு 65 வயது ஆகிறது. சிறு வயது முதலே இந்த தொழிலில்தான் இருக்கிறேன். இரண்டு ஸ்வீட் கடைக்காரரும், ஒரு இறைச்சிக் கடைக்காரரும் இப்போதும் ஓலைப் பெட்டிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த ஆர்டர் கிடைத்ததால்தான் இந்தத் தொழிலில் இன்று வரை நானும், எனது மனைவி செல்லம்மாளும் நீடிக்கிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பிட்டு மற்றும் கொழுக்கட்டை அவிப்பதற்காக மும்பைக்கே ஓலைப் பெட்டி அனுப்பியிருக்கிறேன். கருப்புக் கட்டி கடை, பழக்கடை, பூக்கடை, வத்தல் கடை என அனைத்திலும் ஓலைப் பெட்டியின் பயன்பாடு இருந்தது. ஆனால் நெகிழியின் வருகை எங்கள் தொழிலையே மொத்தமாக முடக்கிவிட்டது. இப்போது நெகிழி பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பனை ஓலைப் பெட்டிகளுக்கு மீண்டும் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். அப்படி கிடைத்தால் இந்தத் தொழிலை விட்டுச் சென்ற பல குடும்பங்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என நம்புகிறோம் என்றார். 
மறுவாழ்வு கிடைக்குமா? நம்முடைய முன்னோர்கள் பனை ஓலையில் பட்டை பிடித்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். நெகிழி பயன்பாட்டால் அடுத்த தலைமுறை அதையெல்லாம் மறந்த நிலையில், இப்போது நெகிழிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், அனைவரும் பழைய பாரம்பரியத்துக்கு திரும்ப வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே தென்னை மரங்களில் ஏறுவதற்கு இயந்திரம் பயன்படுத்தப்படுவதைப் போன்று பனை மரத் தொழிலாளர்கள் எளிதாக மரத்தில் ஓலை வெட்டும் வகையில் இந்தியரத்தைக் கண்டுபிடிக்க அரசு முயற்சிக்க வேண்டும். 
தங்களின் மறுவாழ்வுக்கு அரசு மட்டுமின்றி, ஓலைப் பெட்டிகளை வாங்குவதன் மூலம் பொதுமக்களும் உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் ஓலைப் பெட்டி முடையும் தொழிலாளர்கள். அவர்களின் மறுவாழ்வுக்கு அரசு உதவுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com