ராஜபாளையம் - செங்கோட்டை நான்குவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு

ராஜபாளையம் முதல் செங்கோட்டை வரை அமையவுள்ள நான்குவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து

ராஜபாளையம் முதல் செங்கோட்டை வரை அமையவுள்ள நான்குவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் மனு அளித்தனர்.
ராஜபாளையம் முதல் செங்கோட்டை வரை அமையவுள்ள நான்குவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த டிசம்பர் 27ஆம் தேதி 1500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த மனுவை மறு நினைவூட்டுவதற்காக திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தினர் அளித்த மனு:
நெடுஞ்சாலைத் துறையால் திட்டமிடப்பட்டுள்ள என்.எச்-744 நான்குவழிச் சாலையால் நன்செய் நிலங்கள் பாதிக்கப்படுகிறது. தற்போது அமையவுள்ள சாலையின் அருகே வனப் பகுதி உள்ளதால் வனஉயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
இச்சாலையால் சிவகிரியில் உள்ள உருவாட்டி கண்மாய், ராயகிரியில் உள்ள முத்தூர் கண்மாய், மேலப்பண்ணத்தி கால்வாய், சின்னப்பாறை குளம், பெரியப்பாறை குளம் ஆகியவற்றில் நீர் தேக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் சுமார் 480 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, 45 பாசனக் கிணறுகள் மூடப்படும் அபாயம் உள்ளது. எனவே, மாற்றுப் பாதையில் சாலை அமைக்கக் கோரி வரைபடமும் தயார் செய்து கடந்த 27ஆம் தேதி கொடுத்துள்ளோம். இதற்கு விரைந்து தீர்வு காண கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், பெரியமாரியம்மன் கோயில் ஓடையை தூர்வாரி சம்பந்தப்பட்ட கண்மாய்களுக்கு மீண்டும் நீர் வர ஏற்பாடு செய்யவேண்டும். அவ்வாறு செய்யும்போது ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஆதரவு: புதிதாக அமையவுள்ள நான்குவழிச் சாலைக்கு ஆதரவாக மகாத்மா காந்தி சேவா சங்கத்தினர் மற்றும் சிவகிரி விவசாயிகள் திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com