சின்னங்கள் வராததால் சுயேச்சை வேட்பாளர்கள் தவிப்பு!

மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் தேர்வு

மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் தேர்வு செய்து வேட்புமனுவில் குறிப்பிடுவதற்கு ஏதுவாக சின்னங்களின் பட்டியல் வெளியாகாததால் வேட்பாளர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் வேட்புமனு பரிசீலனைக்கு முன்பாக மீண்டும் ஒருமுறை ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான மனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இம் மாதம் 26ஆம் தேதி மனுதாக்கலுக்கு இறுதி நாளாகும். தேர்தல்களில் வேட்பாளர்களைவிட சின்னங்கள்தான் அதிக முக்கியத்துவம் பெறும். அதன்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்றன. அக்கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அதே சின்னங்களே ஒதுக்கீடு செய்யப்படும்.
கட்சிகளின் சின்னங்கள்: அதன்படி, இந்த மக்களவைத் தேர்தலிலும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சி யானை சின்னத்திலும், பாரதிய ஜனதா கட்சி தாமரை சின்னத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கதிர்அரிவாள் சின்னத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரிவாள்-சுத்தியல்-நட்சத்திரம் சின்னத்திலும், காங்கிரஸ் கட்சி கை சின்னத்திலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி கடிகாரம் சின்னத்திலும் போட்டியிடுகின்றன. தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்திலும், தி.மு.க. உதயசூரியன் சின்னத்திலும், தே.மு.தி.க. கொட்டும் முரசு சின்னத்திலும் போட்டியிடுகின்றன. 
இதுதவிர பதிவு செய்யப்பட்ட கட்சிகளான திரிணமூல் காங்கிரஸ் கட்சி மலர்-புல் சின்னத்திலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஏணி சின்னத்திலும், பா.ம.க. மாம்பழம் சின்னத்திலும், ஆம் ஆத்மி கட்சி துடைப்பம் சின்னத்திலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்திலும், மக்கள் நீதி மய்யம் கட்சி டார்ச் லைட் சின்னத்திலும் போட்டியிடுகின்றன.
சுயேச்சைகள் தவிப்பு: சுயேச்சைகளாக போட்டியிடுபவர்கள் தங்களது வேட்புமனுவில் தங்களுக்கு பிரியமான 3 சின்னங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையத்தின்சார்பில் உள்ள பட்டியலில் உள்ள சின்னங்களைக் குறிப்பிடுவார்கள். வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாள்கள் ஆகிவிட்ட நிலையிலும், சுயேச்சைகளுக்கான சின்னங்களின் பட்டியல் திருநெல்வேலி மாவட்ட அதிகாரிகளிடம் இல்லை. 
அதனால் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் சின்னங்களுக்கான பகுதியை விட்டுவிட்டு பூர்த்தி செய்து மனுதாக்கல் செய்து வருவதால் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
போட்டி வந்தால் குலுக்கல்: இதுகுறித்து தேர்தல் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 22) சுயேச்சைகளுக்கான சின்னங்களின் பட்டியல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதன்பின்பு ஏற்கெனவே சுயேச்சையாக மனுதாக்கல் செய்துள்ளவர்களை மீண்டும் அழைத்து 3 சின்னங்களை தேர்வு செய்து அவர்களது வேட்புமனுவில் குறிப்பிடச் சொல்வோம். புதிதாக மனுதாக்கல் செய்பவர்களும் பட்டியலைப் பார்த்து சின்னங்களை குறிப்பிடலாம். 
அங்கீகரிக்கப்பட்ட, பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அவர்களது கட்சியின் கடிதம் அளிப்பதன் மூலம் கட்சியின் சின்னம் வழங்கப்படும்.
 சுயேச்சைகளில் ஒரே சின்னத்துக்கு 2 அல்லது 3 பேர் இடையே போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டால் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்படும் என்றனர்.

2014 தேர்தலில் 73 சின்னங்கள்!
தமிழகத்தில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது சுயேச்சை வேட்பாளர்களுக்காக 73 சின்னங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வைத்திருந்தது. அவற்றின் விவரம்: பலூன், கிரிக்கெட் வீரர், டார்ச் லைட், பெல்ட், கரும்பலகை, ரொட்டி, சூட்கேஸ், பிரஷ், கேக், கால்குலேட்டர், கேமரா, மெழுகுவர்த்தி, கேரம்போர்டு, தரைவிரிப்பு, கேரட், காலிபிளவர், மின்விசிறி, செருப்பு, சதுரங்கப் பலகை, கோர்ட், தேங்காய், கட்டில், கட்டிங்பிளேயர், வெட்டரிவாள், டீசல் பம்ப், டிஷ் ஆன்டனா, டோலி, மின்கம்பம், பிராக், புனல், வாணலி, கேஸ் சிலிண்டர், கேஸ் ஸ்டவ், கண்ணாடி டம்ளர், திராட்சை, மிளகாய், ஹார்மோனியம், தொப்பி, ஹெல்மெட், வலைகோல் பந்து, அயர்ன்பாக்ஸ், காத்தாடி, பெண்களின் கைப்பை, தபால்பெட்டி, மிக்ஸி, நகவெட்டி, கழுத்துப்பட்டை (டை), பேனா நிப், பென் ஸ்டேன்ட், பென்சில் வெட்டி, பிளேட் ஸ்டேன்ட், பானை, பிரஷர் குக்கர், ரேஷர், பிரிட்ஜ், மோதிரம், ரம்பம், புத்தகப்பை, கத்திரிக்கோல், தையல் இயந்திரம், இறகுபந்து, ஸ்லேட், ஸ்டெதஸ்கோப், ஸ்டூல், மேஜை, மேஜைவிளக்கு, கூடாரம், பல்துலக்கும் பிரஷ், விசில், டம்பர்ட், வயலின், ஊன்றுகோல், ஜன்னல் ஆகிய சின்னங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com