திருச்சி விமான நிலையத்தில் ரூ.950 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பயணிகள் முனையம்: 2021 செப்டம்பருக்குள் முடிக்கத் திட்டம்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.950 கோடியில் அதிநவீன வசதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையம்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.950 கோடியில் அதிநவீன வசதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையம் அமைய இருப்பதாக இந்திய விமான ஆணையக் குழுமத்தின் பொதுமேலாளர் (கட்டுமானம், சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம்) சஞ்சீவ் ஜிந்தால் தெரிவித்தார்.
திருச்சி புதிய விமான நிலையத்தின் மாதிரி வரைபடம் மற்றும் கட்டுமான வடிவமைப்பின்  அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற  அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திருச்சி விமான நிலையத்தை மேம்படுத்துவதோடு, அடுத்த 10 ஆண்டுகளில்  வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்து, எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய முனையம் அமைக்கப்படுகிறது. தற்போது 11,777  சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள திருச்சி விமான நிலையத்தை, 61,634 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய முனையம் அமையும்.  பயணிகள் வருகைக்கும், புறப்பாடுக்கும் தனித்தனி கட்டடம் அமைகிறது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தைப் போன்று திருச்சி விமான நிலையம் உள்நாட்டு, வெளிநாட்டு போக்குவரத்தில் சிறப்பான சேவை அளித்து வருகிறது. அதேபோல, சரக்கு ஏற்றுமதியிலும் திருச்சி விமான நிலையம் குறிப்பிடத்தகுந்த பணியை ஆற்றி வருகிறது.
புதிய  ஒருங்கிணைந்த பயணிகள் விமான முனையத்தின் மேற்கூரை வடிவமைப்பானது, திருச்சியின் பாரம்பரியத் தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. 48 சோதனை மையங்கள், 40 குடியேற்றப் பிரிவு மையங்கள், 3 சுங்கத்துறை சோதனை மையங்கள், 10 பயணிகள் ஏரோ பிரிட்ஜ் போன்றவை இந்த முனையத்தில் அமைகிறது. மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவகையில் முனையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மின்சாரத்தைச் சேமிக்கும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்படும். சூரிய ஒளியைப் பயன்படுத்தி 300 கி.வோ. முதல் 500 கி.வோ. வரை மின்சாரம் உற்பத்தி செய்து, அதனை பயன்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 
ரூ.950 கோடியில் பணிகள்: புதிய விமான முனையம் அமைப்பதற்கு ரூ.872 கோடியும், ஏப்ரான் அமைக்க ரூ.63 கோடியும்,  விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான பணிகள் நவம்பர் மாதத்தில் தொடங்கும். விமான முனையப் பணிகள் 2021 செப்டம்பரிலும், எஞ்சியப் பணிகள் 2020 செப்டம்பரில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து அதிகம் உள்ள நேரத்தில் சர்வதேச விமானச் சேவை பகுதியில் மணிக்கு 2300 பயணிகளையும், உள்நாட்டு விமான சேவைப் பிரிவில் 600 பயணிகளை கையாளக்கூடிய வகையில் இந்த முனையம் அமையும்.
45 மீட்டர் உயரத்தில் கண்காணிப்புக் கோபுரம்:  திருச்சி விமான நிலையத்தில் தற்போது 20 மீட்டர் உயரத்திலுள்ள கண்காணிப்பு கோபுரம் புதிய முனையத்தில் 45 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது.  இதற்காக இந்திய விமான ஆணையக் குழுமத்திடமிருந்து பெற வேண்டிய தடையில்லாச் சான்று பெறப்பட்டிருக்கிறது.
புதிதாகஅமைக்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம், ஏப்ரானும் அனைத்து அதிநவீன வசதிகளையும் கொண்டிருக்கும்.  விமான நிலையத்துக்குச் சொந்தமான இடம் இருப்பதால் அதிகளவில் கையகப்படுத்த வேண்டிய நிலை இல்லை. அதேபோல, தரத்தில் குறைபாடு இல்லாத வகையில் பணிகளை இந்திய விமான ஆணையக் குழுமம் தொடர்ந்து கண்காணிக்கும் .
புதிய முனையம் அமைவதால் வேலைவாய்ப்புகளும் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளிக்கும் வகையில் மையத்தை திருச்சியில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் சஞ்சீவ் ஜிந்தால். நிகழ்ச்சியில், இந்திய விமான ஆணையக் குழுமத்தின் இணைப் பொது மேலாளர்கள் (கட்டடம்) ஈஸ்வரப்பா, (மின் பிரிவு) ஜோசி,  திருச்சி விமான நிலைய இயக்குநர் கே.குணசேகரன்,  புதிய விமான முனையத்தின் ஆலோசனை அமைப்பான இஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அலுவலர்  விகாஷ்  சோப்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நிலம் கையகப்படுத்தப்பட்டதும் விமான ஓடுதளம் அமைக்கும் பணி
திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்தவுடன் ஓடுதளம் அமைக்கும் பணி தொடங்கும் என்றார் அதன் இயக்குநர் கே.குணசேகரன் .
திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்தப் பேட்டி: திருச்சி விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய பயணிகள் முனையம் அமைக்கும் திட்டம்  வரலாற்றுச் சிறப்புமிகுந்த மைல்கல் திட்டமாகும். புதிய முனையம் அமைவதன் மூலம் பயணிகளுக்கான விமானப் போக்குவரத்தை மேலும் சிறப்பான முறையில் அளிக்க முடியும். தற்போது, திருச்சி விமான நிலைய சரக்கு ஏற்றுமதிப் பிரிவில் தினமும் 700 டன் கையாளப்பட்டு வருகிறது. புதிய முனையம் அமைக்கப்படும் போது இதன் அளவு 1,500 டன்னாக உயரும். விமான நிலைய ஓடுதளத்தை விரிவாக்கம் செய்வதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை 6 மாதங்களுக்குள் முடித்துத் தருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதால், அப்பணி முடிந்தவுடன் ஓடுதளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்.
நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் உரியவர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். நிலம் கையகப்படுத்தும் பகுதியில் ராணுவத்துக்குச் சொந்தமான இடம் இருப்பதால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதில் இடம் அடையாளம் காணப்பட்டிருப்பதால், இரு தரப்பிலும் புரிதல் ஏற்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமான நிலைய ஆணையக் குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ரூ.70 கோடிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்சி விமான நிலையம் சார்பில் மாத்தூர், இனாம் குளத்தூர், மணப்பாறை, துவரங்குறிச்சி, காட்டூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.42 லட்சத்தில் கழிப்பிட வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்சி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்குத் தேவையான நவீன சாதனங்கள்,  மருந்துகளைப் பாதுகாக்கும் குளிரூட்டிகள் ரூ.26 கோடி மதிப்பில் வழங்க விடுக்கப்பட்ட கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் 
கே.குணசேகரன்.


5 அடுக்கு பாதுகாப்பு
புதிய விமான முனையத்துக்கு வரும் பயணிகள் 5 அடுக்கு பாதுகாப்பைக் கடந்து தான் உள்ளே செல்லவோ, வெளியே வர முடியும்.  இந்த முனையம் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். தானியங்கி வசதிகள் கொண்டு அமைக்கப்படுவதால், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்வது முதல் அனைத்தும் துல்லியமாக மேற்கொள்ளப்படும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com