காதலர் தின கொண்டாட்டம்: திருச்சியில் இந்து அமைப்புகள் எதிர்ப்பு

திருச்சியில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் தாலியுடன் வந்து இளம்

திருச்சியில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் தாலியுடன் வந்து இளம் ஜோடியினருக்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது.
 திருச்சி மலைக்கோட்டைக்கு வரும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில பாரத இந்து மகா சபை, இந்து தேசிய கட்சி உள்ளிட்டவை அறிவித்திருந்தன.
முன்னச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை அதிகாலையே மலைக்கோட்டை கோயில் நுழைவு வாயில் முன்பாக 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். கோயிலுக்கு வந்த பக்தர்களில் திருமணமாகாத ஜோடியினரை விசாரித்து கோயிலுக்குள் செல்ல அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.
அதேநேரத்தில், கைகளில் தாலி கயிறுகளுடன் இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் 5 பேர் கோயில் நுழைவு வாயிலுக்கு முன்பாக வந்து காதலர் தினத்துக்கு எதிராகவும், கலாசார சீரழிவுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். கோயிலுக்குள் இளம் ஜோடியினரை செல்ல அனுமதிக்க மாட்டோம் என குரல் கொடுத்தனர். இளம் ஜோடியினருக்கு தாலி கயிறு அளிக்கவும் முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி, திருமணம் முடிந்த ஜோடிகளை மட்டுமே அனுமதிப்பதாகவும், பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.
இதேபோல, முக்கொம்பு மேலணை, கீழணை, பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸார் அதிகளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இளம் ஜோடியினர் முக்கொம்பு பூங்காவில் அதிகளவில் காணப்பட்டனர். ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கியும் அன்பை வெளிப்படுத்தினர். இந்து அமைப்புகள் போராட்டம், போலீஸாரின் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் காதலர் தின கொண்டாட்டங்கள் மந்தமாகவே காணப்பட்டன. தியேட்டர்களில் மட்டும் அதிகளவில் காதலர்களை காண முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com