குண்டூரில் சூழல் பொங்கல் விழா

திருச்சி தண்ணீர் அமைப்பின் சார்பில் 5 ஆவது ஆண்டு சூழல் பொங்கல் விழா குண்டூரில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

திருச்சி தண்ணீர் அமைப்பின் சார்பில் 5 ஆவது ஆண்டு சூழல் பொங்கல் விழா குண்டூரில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
குண்டூர் பால்ராஜ் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக  மாவட்ட ஆட்சியர்  கு. ராசாமணி,  மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்  ஜியாவுல் ஹக் ஆகியோர் பங்கேற்றனர். 
நிகழ்ச்சியில், ரசாயன உரம் கலக்காத இயற்கை உரங்களைக் கொண்டு விளைவிக்கப்பட்ட பாரம்பரிய நெல் வகைகளின் புது அரிசியில் , நாட்டு வெல்லம் மற்றும் தேவையான இடுபொருள்களைக் கொண்டு புது மண்பானையில்  பொங்கலிடப்பட்டது. 
நிகழ்வில், நாட்டு விதைகள், காய்கறி விதைகள், நாட்டு மர விதைகள், நெல் ரகங்கள் கொண்ட  கடை அமைக்கப்பட்டு அனைவருக்கும் விதைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழர்களின் மரபு சார்ந்த  பாரம்பரிய விளையாட்டுக்கள் சிலம்பாட்டம், வாள் சண்டை, சுருள்வாள், கத்தி உள்ளிட்ட தற்காப்புக் கலைப்போட்டிகள்  மற்றும் பொழுது போக்கு விளையாட்டுப் போட்டிகளான  உரியடித்தல், கயிறு இழுத்தல்  உள்ளிட்ட பல்வேறு  போட்டிகள் நடைபெற்றன. 
மேலும், நாட்டுப்புறக் கலைகளான கரகாட்டம், கோலாட்டம், பறையாட்டம், கும்மி ஆட்டம் நடைபெற்றன.  
இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் தலைவர் எம். சேகரன் தலைமை வகித்தார்.  செயலாளர் கே.சி நீலமேகம்,  குண்டூர் பால்ராஜ் தோட்ட உரிமையாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தண்ணீர் அமைப்பின்  இணைச் செயலாளர்கள்  கி .  சதீஷ்குமார்,  ஆர்.கே. தாமஸ்,  பொருளாளர் சிவகுருநாதன், துணைத்தலைவர் பொன்னிளங்கோ, நிர்வாகிகள் தனலட்சுமி, செல்வம், லெனின் மற்றும் தண்ணீர் அமைப்பின் ஆலோசனை குமு   உறுப்பினர்கள், கார்த்திக் சிலம்பம் குமுவினர்,  ஜீவா சிலம்பம் குமுவினர், பாலா குமுவினர்கள், குண்டூர்  அன்பாலயம் செந்தில் மற்றும் ஆதரவற்ற பெரியோர்கள்,  மாணவர்கள்,  இளைஞர்கள்,  சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


வாளாடி கடன் சங்கத்தில்...
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.  
விழாவுக்கு, கூட்டுறவு சங்கங்களின் திருச்சி மண்டல இணை பதிவாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். லால்குடி சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சித்ரா, வாளாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் டி.என்.டி. நடேசன்,  அனைத்து பணியாளர் கூட்டுறவு சங்க மாநில துணைத் தலைவர் டி.துரைக்கண்னு, வாளாடி தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விழாவில் லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலிருந்து  சங்கத் தலைவர்களும், சங்க நிர்வாகிகளும்,  சங்க செயலாளர்களும் மற்றும் விற்பனையாளர்களும் பங்கேற்றனர். 
கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி, பானை உடைத்தல்,  இரு சக்கர வாகனத்தினை மெதுமாக ஓட்டுதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மண்டல இணை பதிவாளர் பரிசுகள் வழங்கினார்.

மணப்பாறையில்....
திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் துறை சார்பில் காவலர்கள் பங்கேற்ற பொங்கல் விளையாட்டு போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
மணப்பாறையில் காவல் துறை சார்பில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பொங்கல் விளையாட்டு போட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் திங்கள்கிழமை நடைபெற்றது. காவல் துணை கண்காணிப்பாளர் ஷர்மு தலைமையேற்று போட்டிகளைத் தொடக்கி வைத்தார். காவலர்களின் குழந்தைகளுக்கு பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போட்டி, 25 மீட்டர், 50 மீட்டர் ஓட்டப் பந்தயம், இருபால் காவலர்களுக்கு குண்டு எறிதல், பெண் காவலர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பந்து எறிதல், கயிறு இழுக்கும் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் மனோகர், வாசுகி, உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், நாகவள்ளி மற்றும் தலைமை காவலர்கள், காவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com