திமுகவில் இணைந்தார் வி.பி. கலைராஜன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட வி.பி. கலைராஜன்,  திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட வி.பி. கலைராஜன்,  திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வியாழக்கிழமை திமுக-வில் இணைந்தார்.
அமமுக-வின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலராக இருந்த வி.பி. கலைராஜன், அக் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக் கூறி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் புதன்கிழமை அறிவித்தார்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக திருச்சிக்கு வந்து  தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த திமுக. தலைவர் மு.க. ஸ்டாலினை வியாழக்கிழமை காலை சந்தித்து திமுக-வில் இணைந்தார் வி.பி. கலைராஜன். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
டிடிவி தினகரனுடன் எனக்கு எந்தவித முரண்பாடும் கிடையாது.  அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட திராவிட இயக்கம் பட்டுபோய்விடக் கூடாது. ஆல்போல தழைத்து இன்னும் பல்லாண்டு காலம் விளங்க வேண்டும். அதற்கு தகுதியான தலைமை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மட்டுமே என தீர்க்கமாக முடிவெடுத்து அவரது தலைமையில் கட்சியில் இணைந்துள்ளேன். தேர்தல் என்பதால் அவசரமாக நான் மட்டும் வந்து சேர்ந்துள்ளேன். விரைவில் சென்னையில் மிகப்பெரிய இணைப்பு விழா நடத்தப்படும். அமமுக மட்டுமல்லாது பல்வேறு கட்சிகளில் இருந்தும் திமுக-வில் பலர் இணையவுள்ளனர் என்றார்.
மு.க.ஸ்டாலின் கூறுகையில், அமமுக-வை நாங்கள் சவாலாக கருதவில்லை. மத்தியில் உள்ள பாஜக ஆட்சியையும், மாநிலத்தில் உள்ள அதிமுக ஆட்சியையும் அகற்ற வேண்டும் என்பதே எங்களுக்கான சவாலாக உள்ளது. திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தஞ்சாவூர், பெரம்பலூர் தொகுதிக்கு பிரசாரத்துக்கு வந்ததில் மக்களிடையே மிகுந்த எழுச்சியை காண முடிந்தது. மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆட்சிகளை அகற்ற அரசியல் கட்சிகளைவிட பொதுமக்களே மிகுந்த ஆர்வத்துடன் அந்த பணியை நிறைவேற்ற காத்திருக்கின்றனர் என்றார்.
இந்த நிகழ்ச்சியின்போது, முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, வி. செந்தில்பாலாஜி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com