மத அரசியல்-45: ஆசீவகம் - எழுத்தியல்

மத அரசியல்-45: ஆசீவகம் - எழுத்தியல்

அறிவர் காட்டிய எழுத்தியல் 

தமிழில் அறிவியல் கருதுகோள்களும் அண்டவிசைக் கோட்பாடுகளும் பொதிந்துள்ள இலக்கண நுட்பத்தினை விளக்கு முன் தமிழ் என்ற மொழியின் பெயர்க் கிளவியினை முதற்கண் விளக்குவோம் சுவர் ஒன்றின் அமைப்பினை ஆய்வு செய்ய வேண்டுமாயின் முதலில் அதன் காரைப் பூச்சினை உரித்துக் கற்களின் இயல்பு நலனைக் காட்ட வேண்டும் பின்னர் அக்கற்களின் அமைப்பு அவை இயல்பில் (இசை > எசை) பதிக்கப்பட்ட பங்கு, கற்களின் தரம், அவை செய்யப்பட்ட முறையின் நேர்த்தி, கற்களுக்கு இடையில் பெய்யப்பட்டுள்ள பசைக் கலவையின் பயன்பாடு பொருள்களின் அளவு வீதங்கள் ஆகியவற்றை ஆய்வது போல் தமிழ் எனும் உயர்தனி முதன் மொழியின் பெயர் கிளவியின்கண் பொதிந்துள்ள எழுத்துக்களை ஆய்வாம். 

தமிழ் > த + மி + ழ் 
தமிழ் மொழியின் எழுத்துக்கள் ஒலி வடிவில் பிறக்கும் இடத்தின் அடிப்படையிலும், ஓலியின் ஒலிப்பு அழுத்த வேறுபாடுகளின் அடிப்படையிலும். 

வல்லினம் = கசடதபற
மெல்லினம் = ஙஞநணமன
இடையினம் = யரலவழள

என மூவகை இனங்களாகப் பகுக்கப்படுகின்றன, இம்மூவகை இன எழுத்துக்களும் தமிழ் எனும் சொல்லில் பயின்று வருகின்ற பாங்கும் ஒரு சிறப்பாகும்.

த = வல்லினம்
மி = மெல்லினம்
ழ் = இடையினம்

இனி இவ்வெழுத்துக்களில் அமைந்துள்ள உயிர்மெய் உறவினைப் பகுத்தாய்வோம், 

தமிழ் > த + மி + ழ்
த > த் + அ
மி > ம் + இ
ழ் > ழ் (உ)

அடிவயிறு (உந்தி) மிடறு (கண்டம்) அண்ணம் (நாசியீற்று) எனும் மூவகை எழுத்துப்பிறப்பியல் நிலைகளின் கண்தோன்றும் த், ம், ழ் எனும் மெய்யெழுத்துக்களின் மீது ஊர்ந்த உயிர் எழுத்துக்களைக் காண்போம்.

‘த்’எனும் எழுத்தின் மீது ‘அ’ கரமும் 
‘ம்’எனும் எழுத்தின் மீது ‘இ’ கரமும் ஊர்ந்து வந்தன, 
‘ழ்’ எனும் மெய்யெழுத்தின் மீது கட்புலனாகும் வண்ணம் உயிர் எழுத்துக்கள் ஏதும் ஊர்ந்து வரவில்லையாயினும் மெய்யெழுத்துக்கள் யாவும்,  ‘உ’ கரத்தினை விடுப்பொலியாகக் கொண்ட வையாதலால், இம்மூன்றெழுத்துக்களின் மீதும் முறையே அகர, இகர, ஊகரம் ஊர்ந்து நின்ற தாய்உணர்க , ஊழ்க மெய்யியலார் இப்பகுப்பினைப் பின்வருமாறு பிரித்துப் பொருளுரைப்பர்.
ஆசீவக மெய்யியலார் எழுத்துக்களை, ஆணெழுத்து. பெண்ணெழுத்து. அலிஎழுத்து எனும் பகுப்புக்களாகவும், அமிழ்த எழுத்து, நஞ்செழுத்து எனும் பகுப்புக்களாயும் பிரித்துக் கையாளுவர் இம்மரபு ஆசுகவிகளுக்கு  தெரிந்த செய்திதான் எனினும். இன்றைய பாடத்திட்டங்களிலும் இலக்கண நூற்பாக்களாகவும் இடம்பெறவில்லை என்றே கருதலாம். இருப்பினும் தமிழ்த் துறவியர் மரபில் இவை இன்று வரை கற்பிக்கப்பட்டு வரும் பாடமாகும்.

தமிழ்> த்+ அம்+ இழ் 

மாந்த உடலில் நஞ்சு நிலை ஒவ்வோர் உவாவிலும்(திதி) உடலின் ஒவ்வோர் தானத்திற்கும் (இடம்) இடப்பெயர்ச்சியுறும், இவற்றை அறிந்து ஊழ்கம் பயின்றவர்தம் ‘அம்’எனும் ஒலியினை உடைய அண்ணப் பகுதியிலிருந்து வெளிப்படும் மொழி என்று பொருள்படும், இழ் > இழி> ‘இழிதல்’ எனும் சொல் வெளிப்படுதல் எனப் பொருள்படும்.

இதன் பொருளாவது நஞ்சு நிலைத் தானட்தையும் தமது ஊழ்க (யோக) வலிமையினால் அமிழ்த நிலைக்கு மாற்றவல்ல ஊழ்கிகளிடமிருந்து வெளிப்பட்ட (அவர்கள் வாயினின்றும் சிந்திய) மொழி எனப்பொருள் கோடலுமாம், இக்காரணம்பற்றியே பாவேந்தரும் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடினார், அதனைத் தருவிக்கும் வழி கீழ்வருமாறு 

தமிழ் > த்+ அம்+ இ + ழ் 
முதன்மாற்றாக > அம்+ இ + ழ்+ த் 
                                        > அமிழ்த்(உ*) > அமிழ்து எனவரும், 
(*உகரம் விடுப்பொலிக் கண்பிறந்த எழுத்துப்பேறு)

தமிழ் அமிழ்தான வகையும், அமிழ்தே தமிழான வகையும், கண்கூ டாம், இனி இச்சொல்லின் கண்பயின்று வந்துள்ள மெய்யெழுத்துக்களின் மீது ஊர்ந்து வரும் உயிரெழுத்துக்களான அ,இ, உ எனும் மூன்றெழுத்துக்களின் இயல்பு கூறுவாம்.

சுட்டெழுத்துக்களுக்கான இலக்கணத்தில், அ, இ, உ, இம்மூன்றுந் தனிவரிச்சுட்டே எனும் ஊற்பா இவ்வெழுத்துக்கள் மூன்று மட்டுமே இருதினை ஐம்பால் மூவகையிடத்தும், பிறயாவற்றையும்ம் சுட்டி விளக்க வல்லன என்பதாம்.

ஆசீவக மெய்யியலில் குறிப்பிடப்படும் முப்புள்ளி எனும் சின்னம் அஃஉ எனும்வடிவம்கொண்ட தாகும், இதில் இடையில் பயின்று வரும் ஃ எனும் ஆய்த எழுத்தின் வடிவினை ஒத்தே ”இ” இருக்கும், அதாவது மூன்று வட்டங்களை முக்கோணமாக வலஞ்சுழியில் வரைவதே இகரமாகும், 
[ இ] முப்புள்ளியின் மீது கந்தழி ஊர்ந்த வடிவமே இகரமாகும் ஃ +  = இ 

இக்கந்தழியானது அண்ட வெளியின் பேராற்றல் நிலையினை உணர்த்தும் ஒரு அறிவியல்குறியீடாகும், அகரத்தினை ஆண்நாடியாகவும், உகரத்தினை பெண்நாடியாகவும், இகரத்தினை அலிநாடியாகவும், ஊழ்க மெய்யியல் வரையறுக்கும்.

இவற்றை முறையே அறிவியலின் நேர்முனை, எதிர்முனை. பொதுவம் என்பனவாகக் கொள்ளலாம், இம்மூவகை ஆற்றல் முனைகளின்றி இயக்கம் இல்லை என்பது அறிவியல்கூறு, அத்தகைய இயக்க ஆற்றல் நிலைகளைச் சுட்டும் உயிரெழுத்துக்களையும், ஆற்றல் நிலைக்குறியீடுகளையும்,தமிழ்த்தாய் தன் பெயரிலேயே சுருக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள். 

இனி இம்மூவகை ஆற்றல் முனைகளின் ஆதாரமாக மின்னூட்டம், காந்தப்புபலம், விசை இயக்கம் ஆகியவற்றைச் சுட்டும் மூவகை இனங்களே மெய்யெழுத்துக்களின் மூவகைப் பகுப்புக்களான வல்லினம். மெல்லினம். இடையினம் எனும் மூவகை இனங்களாகும். 

இம்மூவகையினங்களையும் சார்ந்த பதினெட்டு மெய்யெழுத்துக்கள் மாந்தரின் உடலின் பதினெட்டுப் புள்ளிகளிலும் பொருத்தி ஒப்பிடப்படுகின்றன. இந்த பதினெட்டுப் புள்ளிகளையும்,(படிகளையும்) கடந்து அமிழ்த நிலை அண்ணத்தையடையும், என்பது ஊழ்க மெய்யியல். அதற்கான ஒழுக்க வரைவுகளும், தமிழின் சார்பெழுத்துக்களின் இலக்கணத்தினை ஒத்தவை. இம்மெய்யெழுத்துக்கள் குறியீடுகளாக மாந்தர் உடலில் காட்டப்டும் படிநிலைகள் ஆசீவக மெய்யியலில் பதினெட்டுப் படிகளாம் கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு. மேற்கணக்கு நூல்கள் பதினெட்டு அறிவர் மரபினரைப் பதினெண்மராகவே காட்டும் மரபு இன்றும் உண்டு , (பதினெண்சித்தர்கள் என்பது), இனி, இலக்கண நூற்பாக்களை மெய்யியல் கண்ணோட்டத்தில் பொருள்காணுங்கால், 

” உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” 
”உடம்பும் உயிருமாம் அது” 
” அ இ உ இம்மூன்றும் தனிவரிச்சுட்டே”

எனும் நூற்பாக்களும், எழுத்துப் பிறப்பியல் இலக்கணமும் இந்த மெய்யியல் தொடர்பினை நமக்குணர்த்தும் புணர்ச்சி விதிகள் பற்றிய இலக்கணம் மூச்சுப்பயிற்சியின் (ஊழ்க மெய்யியல்) இயைபினை உணர்த்துவதாகவே உள்ள து, புணர்ச்சியிலக்கணத்தில் வரும் நிலைமொழி வருமொழியென்பன உட்செல்லும் மூச்சுக்கும். வெளிப்படுத்தும்  மூச்சுக்கும் குறியீடாகும்.

ஒரு மூச்சோட்டம் உட்செல்லும் நாசி வழியே வெளிப்படும் நிலையினைத் (இயக்கப்படுவதனைத்) தோன்றல் விகாரம் எனவும், ஒரு மூச்சோட்டம் வேறு மூச்சோட்டமாக (இடது நாசியில் நுழைவது வலது நாசியில் மீள்வது அல்லது வலப்பிழையில் உட்செல்லும் மூச்சு இடப்பிழையில் வெளிப்படுவது திரிதல் விகாரம் எனவும், மூச்சோட்டம் சூழுமுனையில் (உலகியல் கெடுநிலையில் செல்வது) கெடுதல் விகாரம் எனவும்,மூச்சின் இயைபினைத்தமிழ் இலக்கணம் கூறும்.

தமிழ் மொழியானது துறவிகளால் குகைகளிலும் பள்ளிகளிலும் பேணி வளர்க்கப்பட்டு காலந்தோறும் பல்வேறு வரிவடிவ மாற்றங்கள் பெற்ற போதும், ஒலிப்பில் அண்மைக்காலம் வரை, அரை வேக்காட்டுப் பகுத்தறிவு சிதறும் வரை, எந்தக் கேடும் சூழப்படாமல் வளர்ந்தும் வாழ்ந்தும் வந்தது, தமிழ் மொழியின் மாத்திரையிலக்கணத்துக்கும். ”ஐ” கார ”அய்” கார வரி வடிவத்தால் நேர்ந்த பெருதீங்கு யாப்பிலக்கணத்திலும் மாத்திரை வேறுபாட்டினைத் தோற்றுவித்து பெருங்குழப்பம் விளைவித்துள்ளது என்கிறார் அறிவர் ஆதி.சங்கரன்.

இக்கட்டுரையில் நாம் தமிழ் எனும் மூன்றுறெழுத்துக்களுக்குக் கொடுத்துள்ளவை சிறுவரைவுகள் மட்டுமே முழுமையானவையல்ல எனவும், இதனை மேலும் விரித்து வரைவுகொடுத்தல் அது ஒரு மாபெரும் நூலாகும். முகம் தொலைந்து போன தமிழர்கள் தமது முகவரியினைத் தேடவேண்டிய இடத்தினை மட்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தமிழ் எனும் மொழியை ஒரு கருவிமொழியாகவும், கருமொழியாகவும், மட்டுமே நோக்காது கருத்தியலில் ஊழ்கம் மற்றும் மெய்யியலுக்கான எளிய தரவுகளைக் கொண்ட ஓர் நுண்மொழியாகவும், காணவேண்டும் எங்ஙனமெனில் இம்மொழியின் கண்கூறப்பட்டுள்ள இலக்கணக் கூறுகள் இம்மொழியினைப் போற்றி வளர்த்த அறிவர் மெய்யியலுக்கும் இலக்கணம் கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம், எடுத்துக்காட்டாக இம்மொழியின் கண்ணுள்ள அ, இ, உ என நாம் கண்ட எழுத்தொலிகள் முறையே ஊழ்க மெய்யியலின் மூன்று வகை வளிநிலை (வாசியோகம்) களைக் குறிப்பதுடன் எந்தவோர் பொருளையும்,சுட்ட இம்மூன்றெழுத்துக்களே சுட்டெழுத்துக்களாக அமைவன, இது பற்றியே வள்ளுவரும், 

”மிகினும் குறையினும் நோய்செயும் நூலோர் 
வளிமுதலா யெண்ணய மூன்று” 

என்பார். உடலின் கண்தோன்றும் வாத, பித்தம் கோழை எனும் மூன்றும் இக்குறிப்பிட்ட வளிநிலைகளின் விளைவேயாம். தமிழின் முதலெழுத்துக் ள் எனப்பட்ட முப்பதின் கண்ணுள்ள மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் அறிவர் மெய்யியலின் பதினெட்டுப் படிநிலைகளைக் குறிப்பதாம், இவை முறையே ”க்” முதல் ”ன்” ஈறாக உடலின் காற்பெருவிரல் முதல் நெற்றிப்பொட்டு ஈறாகப் பதினெட்டு இடங்களில் வைத்துக் குறிப்பிடப்படுகின்றன. இக்குறிப்பு உடலின் கண் அமிழ்த நிலை, நஞ்சுநிலை ஆகியவற்றின் இடங்களை உள்ளடக்கியதாய் வளருவாவில் ஏறுநிலையில் (பாதம் முதல் தலைவரை) காட்டப்பெறும் இத்தொடர் வரிகை. தேயுவாவில் (தலைமுதல் பாதம் வரை) இறங்கு வரிசையில்குறிக்கப்படும், இவற்றுள் வல்லின மெய்களால் குறிக்கப்படும் இடங்கள் எலும்பு முட்டுக்களின் மீதும், இடையின மெய்களால் குறிக்கப்படும் இடங்கள் தசைநாண் முடிச்சுகளிலும் மெல்லின எழுத்துக்களால் குறிக்கப்படும் இடங்கள் வரம் சந்திகளின் குருதி இணைப்புகளிலும் அமையும், இவ்வாறு மெய்யெழுத்தென்பது மொழிக்கு இலக்கணம் கூறும் அதே வேளையில் உடலுக்கும் (மெய்) இலக்கணங் காட்டி நிற்பன. 

அடுத்து உயிரெழுத்துக்களான பன்னிரண்டினுள் ”ஐ” காரம் அண்ட வெளியான (சிதாகாயம்) உச்சந்தலையினையும், (உயிர்இருப்பு). உடலுக்குள் அமைந்த சூரிய, சந்திர மணடலங்களை அகரம், உகரம்,ஆகியவை குறிக்க,. இகரம் சூழு முனையையும், உகரம் குருதி இயக்கத்தினையும், ஏகாரம் வளியினை உறிஞ்சி வெளியேற்றும் தொழிற்கட்டுப்பாட்டையும், ஒகரம் அறியும், செயலின் தொழிற்பாட்டையும், (உணர்நிலை) ஓகாரம் இன வளர்ச்சி (பாலின) தொழிலையும், செயற்படுத்துவன.

ஒளகாரம் பற்று நீக்கிய துறவியர் கண்ணும், ”ஆ”காரம் உண்ணுந் தொழிற்கொண்ட உயிரிகள் கண்ணும் ஊகாரம் புலாலுடம்பைப் பேணுதலையும், ஈகாரம் முதல் எட்டுப் படிநிலைகள் வரையிலும் உடலினின்றும் இயக்குவன. இவ்வுயிர்ச் செயல்பாடுகளை நிகழ்த்துதலானே, இக்குறிப்புரைக்கும் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் எனப்பட்டன, இவ்வுயிர்ச் செயல்பாடுகள் மெய்யியுடலில் இயைபு பெறுவதனைக் குறிப்பதே ஆய்த (ஃ) ஆகும், இம்முப்புள்ளிகள் முப்பரிமாணத்தில் நீளம், அகலம், ஆழம் எனும் மூவச்சுக்களையும், குறித்து நின்றன.
 
எழுத்துப்பாலியல் எழுத்துக்கள் ஆணெழுத்துக்களெனவும், பெண்ணெழுத்துக்களெனவும், அலி எழுத்துக்களெனவும், மூவகைப்படும், இவற்றுள் அலி எழுத்துக்கள் ஆணலி, பெண்ணலி என இருவகைப்படும், இவற்றின் பகுப்பு, எழுத்துக்களின் வலிமையின் அடிப்படையில் எழுந்ததேயாகும், இரு பெயர்கள், அல்லது ஒப்புச் சொற்களின் முதலெழுத்துக்களை ஆயுங்கால் ஆணெழுத்து பெண்ணெழுத்தினை வெல்லும். அதாவது, ஆணெழுத்தில் தொடங்கும் சொல் பெண்ணெழுத்தில் தொடங்கும் சொல்லை (அதாவது அச்சொல் குறிக்கும் வினையை அல்லது பொருளை) வெல்லும் என்பதாம், இவற்றின் தன்மைக்கேற்ப எழுத்து வலிமையும், அமையும்.  ஆணெழுத்திலும், பால் கடந்தவற்றிலும் தொடங்கும் சொற்களைப் பயன்படுத்தினால், பிற சொற்களால் இவற்றை வெல்லுதல் இயலாவாம்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை 
வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து 

எனும் குறளும் ஈண்டுக் கருதத்தகும். அடுத்ததாக அமிழ்த எழுத்துக்கள், நஞ்செழுத்துக்கள் எனும் பகுப்பாகும். மொழி முதல் வாரா எழுத்துக்கள் என்பன நாம் அறிந்தவையே. நச்சுத்தன்மையினை இயல்பாகக் கொண்ட மையான இவ்வெழுத்துக்களைத் தொடக்கமாகக் கொண்டு சொற்களை அமைப்பதில்லை, இவற்றுள் அரைநஞ்சு கொண்ட எழுத்துக்களும்உண்டு, (எடுத்துக்காட்டாக ”ய” காரத்தில் ”யா” எனும் எழுத்து மொழி முதல் வரும், ஆயினும் யகரத்தின் பிறவெழுத்துக்கள் மொழி முதல் வாரா. எனவே யகரம்அரை நெஞ்செழுத்துகட்கோர் சான்று. 

அமிழ்த எழுத்துக்கள் என்பவை தம்மை பயன்படுத்தும் சொற்களின் பொருளை நெடிது உயர்வு பெறுமாறு விளங்கிடச் செய்யும் தன்மையினாலும், ஓலிப்போர்க்கும் தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூவகையிடத்தும் நல்வினையையே காலங்கடந்தும் விளைத்தலானும் இப்பெயர் பெற்றன. வணங்குதலும் வாழ்த்தொலியும்(வாயுறை வாழ்த்து) அமிழ்த எழுத்துக்கள் பயின்று வரும் வெண்பாவானும் ஆசிரியப்பாவானும்அமைதல் வழக்காகும். 

அழிந்து படவேண்டுவனவும், தீதும், வசையும், பழிப்பும், நஞ்செழித்திலமைய வேண்டுமெனவும் நம் அறிவர் மரபு கூறும் கொள்கையாகும். வசையாடுதலில்வசை, வசைமீட்சி. வஞ்சப் புகழ்ச்சி, பழிப்பு, அறம் பாடுதல் எனப் பலவகையுண்டு.

 அறம்பாடுதலின் கண். எழுத்து, நஞ்சு, சொல் நஞ்சு, பொருள் நஞ்சு, எதிர்மறை. உடன்பாட்டு எதிர்மறை, பழிப்பு, பாடாண் நஞ்சு, எதுகை நஞ்சு, சந்த நஞ்சு (இவை இரண்டும் ஒலி நஞ்சு வகையின) எனப் பல்கூறுகளும், ஆணையிடல், சான்றிடல், தேற்றம், தனி நஞ்சு எனப் பல உறுப்புகளும் பயின்று வரப்பாடப்படுவதும் உண்டு. பெரும்பாலான அறம்பாடிகள் வசை மீட்சியும், உடனே பாடிவிடுவர் அவர்தம் சான்றாண்மையே அதற்குக் காரணமாம். வரி நஞ்சு, ஒலி நஞ்சு ஆகிய இரு திறத்து  நஞ்சினும், ஊழ்கநஞ்சு வலிமையுடையதென்றறிக.

ஐயனார் தந்த ஐகாரமும், ஐகாரம் தந்த வள்ளுவரும் தமிழ் மொழியின் உயிரெழுத்துக்களிலேயே ஐகாரமும் ஔகாரமும் தனிச் சிறப்புடையன. எழுத்துப் பாலியலில் பெண் எழுத்துக்களாகக் கருதப்படும் இவையே ஊழ்க மெய்யியலில் (யோகம்) முதன்மையான இடத்தைப் பெற்றவை. தமிழின் பிற எழுத்துக்கள் மொழிக்கு இலக்கணம் கூறும்போது, இவ்வெழுத்துக்கள் மெய்யியலுக்கு இலக்கணம் கூற வல்லவை.

இவற்றுள் ஐகாரம் என்பது சூரிய, சந்திர கலைகளின் இயைபினாற் தோன்றும் சுழுமுனை என்னும் கலையினையும், நாடிகளில் சேட்டுமம் என்னும் நாடியையும் குறிக்கும். ஐயம் என்னும் சொல் சேட்டுமத்தைக் குறிப்பதாகும்.

ஐயம் > ஐ+ய்+அம்
ஐ – பகுதி
ய் – உடம்படுமெய்
அம் – விகுதி

ஐயம் என்பது ஆண்நாடியா அல்லது பெண் நாடியா எனப் பகுத்தறிய இயலாத நிலையினை உணர்த்துவதாகும். இரு பொருளின் மயக்குத் தோற்றமாம் நிலையினை ‘ஐயம்’ (ஐயுறவு) எனக் குறிப்பதும் இதனடியில் எழுந்ததேயாம். இந்த ஐய நிலை கைவரப் பெற்ற ஊழ்க மெய்யியலில் முதிர்ந்தோரையே ஐயன் எனவும் ஐயனார் எனவும் வழங்கும் வழக்கம் தோன்றியது.

ஐயன் > ஐ+ய்+அன்
ஐ – பகுதி
ய் – உடம்படுமெய்
அன் – ஒருமை ஆண்பால் விகுதி

இவ்வாறு ஊழ்க மெய்யியலில் இறுதி நிலை கைவரப் பெற்ற ஆசீவகத் துறவிகளே ஐயனார் எனும் சிறப்புத் தகுதி நிலையினால் தமிழர்களால் வணங்கப்படும் சிறப்புப் பெற்றவர்களாவர். நாளடைவில் சிறப்புக்குரிய சான்றோர்களையும் தகுதி நிலையில் உயர்ந்தவர்களையும் கூட ஐயா எனும் விளி குறிப்பதாயிற்று.

இவ்வாறு பல்லாற்றானும் சிறந்த நிலையில் போற்றத் தக்க கருத்துகளைத் தம் நூலில் வழங்கிய காரணத்தாலேயே திருவள்ளுவரைக் கூட அண்மைக் காலத்தில் ஐயன் திருவள்ளுவர் என வழங்கும் வழக்கு தோன்றியது.

இந்த ஐகாரம் எனும் எழுத்திற்கான பிறப்பிலக்கணத்தினைத் தொல்காப்பியர் உட்பட இலக்கண ஆசிரியர் பலரும் வரையறை செய்துள்ளனர். இவ்வெழுத்தொன்றும் தமிழுக்கோ, அல்லது தமிழ் மொழியினைப் போற்றி வளர்த்த ஆசீவகத் துறவிகளுக்கோ புதிதன்று.

ஐ எனும் எழுத்தின் வரி வடிவினை நோக்குங்கால் இரண்டு யகரங்கள் ஒன்றுடன் ஒன்று உள் நோக்கிப் புணர்ந்த நிலையினைக் குறிக்கும்.

தமிழில் உயிரெழுத்துக்களின் வரிவடிவங்கள் யாவும் வட்ட வடிவத்துடனேயே தொடங்கும் எனும் ஆசீவக மரபின் கருத்துக்கொப்ப ஐகாரத்தின் மேற்பகுதியில் உள்ள யகரம் ஒரு வட்டச் சுழியுடன் தொடங்கப்படுகிறது.

இந்த யகரம் ஆசீவகத்திற்கும் பின்னாளில் தமிழகத்தில் பரவிய சிவனியத்தில் கூட ‘நமசிவய’ எனும் மந்திரத்தில் விண்ணைக் குறிக்கும் எழுத்தாகவும், உயிரைக் குறிக்கும் இடுகுறியாகவும் காட்டப் பெறுகிறது.

யகரம் மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் இணைக்கப் பெறுவதே ஐகாரத்தினைத் தோற்றுவிக்கும் வரிவடிவாம். இந்த யகரம் இருபகுதியிலும் (மேலும் கீழும்) வெளி நோக்கியவாறு எழுதினால் ஆசீவகக் குறியீடான இருபுற முத்தலைக்கோல் தோன்றும். இரண்டையும் ஒரு சிறு கோட்டால் இணைத்து இக்குறியினைப் பெறலாம். ஆசீவகர்களின் முதுமக்கள் தாழிகளிலும் இக்குறியீட்டினைக் கண்ட ஆய்வாளர்கள் யகரம் உயிரைக் குறிக்கும் எழுத்தாகையால் மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் உள்ள யகரம் உயிர் பிறப்பதனையும் இறப்பதனையும் (அல்லது உயிர் ஒடுங்குதலையும்) குறிக்கும் குறியீடே இது எனக் கண்டுரைத்தனர்.

இவ்வளவு சிறப்புக்குரிய ஐகாரமும் அதன் இரு (மேல், கீழ்) பகுதிகளாய் இயங்கும் யகரமும் பிரிக்க இயலாதன. இந்த ஐகாரம் பயின்று வரும் தமிழிக் கல்வெட்டுகளில் கூட யகரத் தொடர்புடனே எழுதப்பட்டுள்ள வழக்கினைக் காணலாம். 

பெரிய சுவர் ஒன்றினை முழுதுமாக அழிக்க வேண்டுமாயின் ஆங்காங்கு ஒரு சில செங்கற்களைப் பிடுங்கினால் போதும். நாளடைவில் அந்த சுவரும் அந்த சுவரினால் அடைக்கப்பட்ட கட்டடமும் சிதைந்து அழியும் என்ற அடிப்படையில் தமிழ் மொழியினை வேரறுக்கத் துணிந்த வல்லடியினரின் வழித்தோன்றல்களுக்கு வழிகாட்டிய செயல் இது.

மதிப்பிற்கும் சிறப்பிற்கும் உரிய பெரியோரை “ஐ“ என்று குறிக்கும் வழக்கு சங்க காலம் தொட்டே இருந்து வந்துள்ளதனை பொய்யா மொழிப் புலவராம் திருவள்ளுவரும் தமது 771-ஆம் திருக்குறளில் நெடுமொழி வஞ்சியில் பாடியுள்ளார். திருவள்ளுவரை ஐயன் திருவள்ளுவர் என்று வழங்கும் இந்த அரசு திருவள்ளுவராலும் முதுபெரும் மொழி ஆர்வலர்களாலும் போற்றப்படும் ஐகாரத்தினை காப்பதன் மூலமாக மட்டுமே திருவள்ளுவரையும் அவர்தம் அறிவு மரபினையும் ஆன்றோர் வளர்த்த தமிழையும் உண்மையில் மதிப்பதாகக் கருதப்படும் என அறிக.

இந்த மொழிச்சிதைவு எழுத்துச் சீர்திருத்தம் இருப்பதனை தமிழர் உணர்ந்து கொண்டு இந்த ஐகாரம் மட்டுமன்றி ஏனைய எழுத்து வடிவங்களையும் காக்க முனைவோம்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com