பங்குச் சந்தை வரலாற்று உச்சத்தை தொட்ட வாரம்

மும்பை பங்குச் சந்தைக்கு கடந்த வாரம் புதிய வரலாற்று உச்சத்தை தொட்ட வாரமாக அமைந்தது. மேலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் மீண்டும் 11,000 புள்ளிகளை தாண்டி முதலீட்டாளர்கள் நீண்டநாள் கனவை
பங்குச் சந்தை வரலாற்று உச்சத்தை தொட்ட வாரம்

மும்பை பங்குச் சந்தைக்கு கடந்த வாரம் புதிய வரலாற்று உச்சத்தை தொட்ட வாரமாக அமைந்தது. மேலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் மீண்டும் 11,000 புள்ளிகளை தாண்டி முதலீட்டாளர்கள் நீண்டநாள் கனவை நனவாக்கும் வாரமாக இருந்தது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் காணப்பட்ட ஏற்ற இறக்கம், பொருளாதார புள்ளிவிவரங்கள் சாதகமின்மை, அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை திரும்பப் பெற்றது, அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளிடையே ஏற்பட்ட வர்த்தக போர் உள்ளிட்ட நிகழ்வுகளால் இந்திய பங்குச் சந்தைகள் கட்டுண்டு கிடந்தன. இந்த நிலையில், கடந்த வாரம் முன்னணி நிறுவனங்களின் முதல் காலாண்டு முடிவுகள் வெளியாகி பங்குச் சந்தைக்கு நல்லதொரு தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தன. 
அதிலும் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸின் முதல் காலாண்டு நிதி நிலை முடிவு வெளியீடு பங்குச் சந்தையில் வலுவான ஏற்றத்தை ஏற்படுத்தின. இருபெரும் பொருளாதார சக்திகளாக திகழும் அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகம் தொடர்பாக எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் சர்வதேச சந்தைகளை பாதித்துள்ளது. இருந்தபோதிலும், அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் அதிகரித்ததாக வெளியான புள்ளிவிவரம் சர்வதேச சந்தைகள் மீண்டு வருவதற்கு உதவியாக இருந்தன.
நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் சில்லறைப் பணவீக்கம் சென்ற ஜூனில் 5 மாதங்களில் இல்லாத அளவில் உயர்ந்தது, மே மாதத்தில் தொழில்துறை உற்பத்தி ஏழு மாதங்களுக்குப் பிறகு மிகவும் குறைந்து போனது ஆகியவை உள்ளூர் சந்தை நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் காணப்பட்ட சரிவு, நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நன்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளிட்டவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் முக்கிய காரணிகளாக அமைந்தன. இதனால், வார இறுதியில் பங்குச் சந்தைகளில் காளையின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத உச்சத்தை எட்டியதுடன், நிஃப்டியும் 11,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.
கடந்த வாரத்தில் எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண் 3.36 சதவீதம் ஏற்றத்தைக் கண்டது. இவைதவிர, நுகர்வோர் சாதனங்கள் 0.92 சதவீதமும், மின்சாரம் 0.58 சதவீதமும், ரியல் எஸ்டேட் 0.44 சதவீதமும், மருந்து 0.08 சதவீதமும் அதிகரித்தன. பெரும்பாலான துறை குறியீட்டெண் ஏற்றம் கண்டபோதிலும், உலோகம் 1.18 சதவீதமும், ஐபிஓ 0.79 சதவீதமும், மோட்டார் வாகனம் 0.55 சதவீதமும், பொதுத் துறை நிறுவனங்கள் 0.36 சதவீதமும் குறைந்தன. சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 31 நிறுவனங்களில், 20 பங்குகளின் விலை உயர்ந்தும், 11 பங்குகளின் விலை குறைந்தும் காணப்பட்டன.
பிராட்பேண்ட் உள்ளிட்ட புதிய சேவைகளை தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, கடந்த வாரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை அதிகபட்ச அளவாக 12.31 சதவீதம் ஏற்றம் பெற்று முன்னெப்பொதும் இல்லாத உயரத்தைத் தொட்டது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு மீண்டும் 10,000 கோடி டாலரை தாண்டி முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் திளைக்க செய்தது. பரஸ்பர நிதி வர்த்தகத்துக்கான செபியின் அனுமதியை பெற்றதாக தெரிவித்ததையடுத்து, யெஸ் வங்கி பங்கின் விலை 6.81 சதவீதம் உயர்ந்தது. அதேசமயம் முதலீட்டாளர்களின் வரவேற்பின்மையால், ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை 5.23 சதவீதம் குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 883 புள்ளிகள் அதிகரித்து 36,541 புள்ளிகளாக நிலைத்தது. இப்பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.14,724.75 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 246 புள்ளிகள் உயர்ந்து 11,018 புள்ளிகளில் நிலைத்தது. இப்பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.1,42,423.97 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
வரும் வாரத்திலும் பங்குச் சந்தைகளின் போக்கை தீர்மானிப்பதில் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளே முக்கிய பங்கு வகிக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com