வங்கிகளும் வாராக் கடனும்

வங்கிகளின் வாராக் கடன் மேலும் அதிகரிக்கும் என்றும், இதனால் வங்கிகளுக்கு மேலும் சிக்கல் ஏற்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கிகளும் வாராக் கடனும்

வங்கிகளின் வாராக் கடன் மேலும் அதிகரிக்கும் என்றும், இதனால் வங்கிகளுக்கு மேலும் சிக்கல் ஏற்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2018 மார்ச் 31 நிலவரப்படி, வங்கிகளின் வாராக் கடன் விகிதம் 11.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டின் இறுதியில் 12.2 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் வாராக்கடன் பிரச்னை காரணமாக தற்போது பொதுத் துறையைச் சேர்ந்த 11 வங்கிகள் பி.சி.ஏ. (பிராம்ப்ட் கரெக்டிவ் ஆக்ஷன்) சட்டத்தின்படி ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. (வங்கிகளின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லையென்றால், அந்த வங்கிகளின் மீது ரிசர்வ் வங்கி ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுப்பதற்கு பி.சி.ஏ. சட்டம் வழிவகை செய்கிறது.). மேலும், 6 வங்கிகள் தங்களது மூலதனச் செயல்பாடுகளில் மோசமான நிலையில் உள்ளன எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
அதிக வட்டி கிடைக்கும் என ஆசைப்பட்டு, தனியார் நிதி நிறுவனங்களில் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தோர் ஏராளம். குறிப்பாக, தமிழகத்தில் 1990-களில் ஏராளமான தனியார் நிதி நிறுவனங்கள் புற்றீசல்கள் போல் தோன்றின. அவை கவர்ச்சிகரமான நிதி சேமிப்புத் திட்டங்களை அறிவித்து, மக்களிடம் அதிக அளவில் பணத்தை அறுவடை செய்துவிட்டு, தலைமறைவாகின. இந்த நிதி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டோர் ஏராளம். தற்போதும் சில நிதி நிறுவனங்கள் மீதான வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
லீமன் பிரதர்ஸ் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனமானது பன்னாட்டு அளவிலான நிதிச் சேவை நிறுவனமாகும். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது. அமெரிக்காவில் 4-ஆவது பெரிய முதலீட்டு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றிருந்தது. இந்த நிறுவனத்தின் கீழ் பல துணை நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்தக் குழுமத்தில் 25,000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தனர். லீமன் நிதி நிறுவனத்தின் தலைவராக 1994 முதல் 2008ஆம் ஆண்டு வரை ரிச்சர்ட் செவரின் ஃபல்ட் இருந்தார்.
இந்த நிதி நிறுவனம் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி திவால் நோட்டீûஸ வெளியிட்டது. அச் சமயத்தில் இந்த நிறுவனத்தின் கடன் மதிப்பு சுமார் 61,900 கோடி டாலர். நிதி நிறுவனம் திடீரென திவால் நோட்டீûஸ வெளியிட்டதால், பன்னாட்டு அளவில் நிதிச் சந்தை சீர்குலைந்தது. என்ரான் உள்ளிட்ட பல்வேறு நிதி சேவை நிறுவனங்கள் திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், லீமன் பிரதர்ஸின் அறிவிப்பானது, பன்னாட்டு நிதி சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை பன்னாட்டு அளவில் நிதிச் சந்தையில் ஏற்பட்ட சுனாமி என வர்ணித்தனர்.
இந்தியாவில் அந்த சமயத்தில், அதாவது சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர், தனியார் வங்கிகள், அந்நிய வங்கிகளின் கிளைகள், நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் பொதுத் துறை வங்கிகளைத் தேடி ஓடினர். பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு நாளைக்கு சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு புதிய முதலீடுகள் வந்தன என்றால் நிலைமையைப் புரிந்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் தனியார் மற்றும் அந்நிய நாட்டு வங்கிக் கிளைகளில் செய்யப்பட்ட முதலீடுகளில் ரூ.60,000 கோடி நிதி பொதுத் துறை வங்கிகளுக்கு மாறின.
பொதுத் துறை வங்கிகளில் முதலீடு செய்தால், முதலுக்கு மோசம் ஏற்படாது என்று முதலீட்டாளர்கள் நம்பினர். மத்திய அரசு வங்கிகளை எளிதில் மூடாது. நெருக்கடி ஏற்பட்டால், நிதியை ஒதுக்கியாவது செயல்பட வைக்கும் என்று முதலீட்டாளர்கள் ஆணித்தரமாக நம்பினர். அந்த நம்பிக்கை இன்றுவரை உள்ளது.
ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது நிலைமை? விஜய் மல்லையாவும், நீரவ், லலித் மோடிகளும் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, அந்நிய நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களிடம் வழங்கிய கடனை எவ்வாறு மீட்பது என்று பொதுத் துறை வங்கிகள் விழி பிதுங்கி நிற்கின்றன. ஆனால், குறைந்த அளவில் நகைக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், வீட்டுக் கடன் வாங்கியுள்ளோர் மீது சாட்டையை சுழற்றி வருகின்றன. வாராக் கடன் பட்டியலில் உருக்கு, மின்சாரம் உள்ளிட்ட உற்பத்தி நிறுவனங்களே முன்னணி வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் தற்போது, 11 பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு அதிகமாக உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த நிதியாண்டில், ஐ.டி.பி.ஐ. வங்கியின் வாராக் கடன் ரூ.5,662.70 கோடி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா-ரூ.38,130.70 கோடி. பேங்க் ஆப் இந்தியா-ரூ.7,000 கோடி, தேனா வங்கி-ரூ.16,361.44 கோடி, ஓரியன்டல் பேங்க்- ரூ.2,419.47 கோடி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா-ரூ.18,433 கோடி. மேலும், யூகோ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, அலாகாபாத் வங்கி ஆகிய பொதுத் துறை வங்கிகளும் அதிக வாராக் கடன் உள்ள வங்கிகளின் பட்டியலில் உள்ளன. 
நடப்பு நிதியாண்டில் வாராக் கடன் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து ஆய்வு செய்வதற்கும், அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் தேசிய அளவிலான கடன் மேலாண்மை நிறுவனம் ஒன்றை விரைவில் தொடங்கவுள்ளனர். சுனில் மேத்தா கமிட்டி இதுகுறித்து ஆய்வு செய்யவுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வங்கிகளின் வாராக் கடன் விகிதம் 7 சதவீதமாக இருந்தது. ஆனால், மார்ச் 2018 நிலவரப்படி, இது 11.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டுகளில் வாராக் கடன் அளவானது, ஏற்ற இறக்கமின்றித் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் வர்த்தக வங்கிகளுக்கு இடையே வேறுபாடு காணப்படுகிறது. அதாவது, ஐ.டி.பி.ஐ. வங்கியின் வாராக் கடன் விகிதம் சுமார் 24% என்றால், லாபமீட்டும் வங்கியின் வாராக் கடன் விகிதம் 1 சதவீதமாக உள்ளது.
மேலும், 2019 மார்ச் 31-இல் வாராக் கடன் விகிதமானது 12.2 சதவீதமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 2000-ஆம் ஆண்டிலிருந்து கணக்கிடும்போது, இது மிகவும் அதிகபட்ச அளவாகும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் பி.சி.ஏ. சட்டத்தின் கீழ் கண்காணிப்பில் உள்ள மேற்கூறிய 11 பொதுத் துறை வங்கிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு செயல்பட வேண்டும். கடன் வழங்குதல், பணியாளர் நியமனம், புதிய கிளைகள் தொடங்குதல் உள்ளிட்டவற்றிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
சரி, இதை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது? தற்போதைக்கு இது சாத்தியமில்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். நாட்டின் நிதிச் சூழல் சரியாக இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வட்டி விகிதம், நடப்புக் கணக்கு மற்றும் நிதிப் பற்றாக்குறை, பணவீக்கம் ஆகியவை எல்லாம் வங்கிகளுக்கு சாதகமாக இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வாராக் கடன் தள்ளுபடி, நிதி மோசடி ஆகிய காரணங்களால் வங்கிகள் அதிக இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், புதிய திவால் சட்டம் வங்கியாளர்களுக்கு கை கொடுக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. வாராக் கடன் பிரச்னையைச் சமாளிக்க, பொதுத் துறை வங்கிகளில் அரசின் முதலீடு அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.55,000 கோடி திரட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.டி.பி.ஐ. வங்கியை பொருத்த வரையில், அதன் இழப்பை சரி கட்ட பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. முன்வந்துள்ளது. அந்த வங்கியில் பெரும்பான்மைப் பங்குகள் பெற்று, வங்கித் துறையில் இறங்கவும் எல்.ஐ.சி. திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று ஆணையம் அளித்துவிட்டது.
வங்கிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண, அரசு கட்டுப்பாடுகளைக் குறைத்து, வங்கிகளுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது. 
வங்கிகளில் அரசின் பங்கு மூலதனத்தை 33 சதவீத அளவுக்கு குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. எத்தகைய சீர்திருத்தம் கொண்டு வந்தாலும், அது வங்கிகளை சரிவிலிருந்து மீட்டு, அவற்றின் வளர்ச்சிக்கு உதவினால் சரி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com