வங்கி சீரமைப்பு: ஒரு நாணயம், இரு புறங்கள்

நடப்பு நிதி ஆண்டு முடிவுக்குள் சர்வதேச பேஸல் விதிமுறைகளுக்கு ஏற்ப, பொதுத் துறை வங்கிகளுக்கு சுமார் ரூ. 1.2 லட்சம் கோடி கூடுதல் மூலதனம் செலுத்த வேண்டி வரும் என்று கூறப்படுகிறது.
வங்கி சீரமைப்பு: ஒரு நாணயம், இரு புறங்கள்

நடப்பு நிதி ஆண்டு முடிவுக்குள் சர்வதேச பேஸல் விதிமுறைகளுக்கு ஏற்ப, பொதுத் துறை வங்கிகளுக்கு சுமார் ரூ. 1.2 லட்சம் கோடி கூடுதல் மூலதனம் செலுத்த வேண்டி வரும் என்று கூறப்படுகிறது.

அதாவது, அடுத்த 5 மாதங்களில் இந்தத் தொகையை வங்கிகள் திரட்டியாக வேண்டும். வங்கிகளுக்கு ரூ. 2.11 லட்சம் கோடி கூடுதல் மூலதனம் தேவைப்படுகிறது என்று கடந்த ஆண்டு அக்டோபரில் அரசு தெரிவித்தது. இந்த நிலையில், இதுவரை ரூ. 1.12 லட்சம் கோடி மட்டுமே கூடுதல் மூலதனமாக பொதுத்துறை வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது. முதல் கணிப்புப்படி இன்னும் ரூ.99,000 ஆயிரம் கோடியை நிதி ஆண்டு முடிவடைவதற்குள் செலுத்த வேண்டியுள்ள நிலையில், பல்வேறு காரணங்களால் மேலும் ரூ. 21,000 கோடி தேவைப்படுவதாகத் தெரிகிறது.

இதற்கான முக்கியக் காரணம், வாராக் கடனை சந்திப்பதற்காக வங்கிகள் கட்டாயமாக குறிப்பிட்ட அளவு கூடுதல் மூலதனம் பெற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்துவதே. வாராக் கடன் வசூலில் முனைப்பு காட்டாத வங்கிகள் "உடனடி சீரமைப்பு நடவடிக்கை' எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருகிறது. கூடுதல் மூலதனம் திரட்டுவது இதன் ஒரு பகுதியாகும்.

கடன் தவணை 90 நாட்களைக் கடந்தால், ஒரு நாள் கூட தளர்வு காட்டாமல், அந்தக் கடன் தொகையை வாராக் கடன் என்று அறிவிக்க வேண்டும் என்றும், வாராக் கடன் இடர்ப்பாட்டை எதிர்கொள்வதற்கு வருவாயில் ஒரு தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது. நாட்டின் அனைத்து வங்கிகளும் இந்த நடைமுறையைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பதில் ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டி வருகிறது.

2009-ஆம் ஆண்டு தொடங்கிய வாராக் கடன் பிரச்னை 2013-இல் தீவிரம் பெற்றபோதிலும், 2015-இல் ஒரேயடியாக தவணை கெடுபிடியை ரிசர்வ் வங்கி காட்டியது சரியல்ல என்று ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள பட்டயக்கணக்காளர் எஸ்.குருமூர்த்தி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளில் ரூ. 1.5 லட்சம் கோடியை மத்திய அரசு செலுத்தியுள்ள போதிலும், இக் கால அளவில் இந்த வங்கிகள் சந்தித்த சுமார் ரூ. 1.3 லட்சம் கோடி கடன் இடர்ப்பாட்டை ஈடு செய்யவே அது போதாமல் ஆகிவிட்டது. 

நிதி ஆண்டில் பாதி ஓடிவிட்ட நிலையில், ஏற்கெனவே திட்டமிட்ட தொகைக்கு மேல் எந்தத் தொகையையும் செலுத்தும் நிலையில் அரசு இல்லை என்றே கூற வேண்டும். திருப்திகரமாகச் செயல்படும் அரசு வங்கிகள் பொதுப்பங்கு வெளியீடு மூலம் கணிசமான தொகையை சந்தையிலிருந்து திரட்டலாம் என்பது அரசு முன்பாக இருக்கும் சிறந்த வழி.

மற்றொரு வழி - சிறப்பாகச் செயல்பட்டு வரும் பெரிய வங்கியுடன் வேறு சில வங்கிகளை இணைப்பதன் மூலமாக, கூடுதல் மூலதனச் சிக்கலிலிருந்து அரசு விடுபடலாம் என்பதாகும்.

அந்த வகையில், நல்ல முறையில்  செயல்பட்டு வரும் பாங்க் ஆப் பரோடாவுடன் விஜயா வங்கி, தேனா வங்கியை இணைக்கும் பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதில் தேனா வங்கியின் நிதி நிலையை சரி செய்ய "உடனடி சீரமைப்பு நடவடிக்கை' எடுக்க வேண்டுமென ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாங்க் ஆப் பரோடா வங்கி நாட்டின் மேற்குப் பகுதியில் மிக அதிகமாகவும், பிற பகுதிகளில் பரவலாகவும் கிளைகள் அமைத்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தேனா வங்கி மகாராஷ்டிரத்தில் அதிக கிளைகள் கொண்டுள்ளது. விஜயா வங்கி கர்நாடகத்தில் அதிகமாகவும் பிற தென் மாநிலங்களில் பரவலாகவும் செயல்பட்டு வருகிறது. பாங்க் ஆப் பரோடாவுடன் மற்ற இரு வங்கிகளை இணைப்பதன் மூலம், அவ்விரண்டு நடுத்தர ரக வங்கிகளின் கூடுதல் மூலதனச் சிக்கலைத் தீர்க்க இயலும். அதே நேரத்தில், நாடு முழுவதும் செயல்படுகின்ற பெரிய வங்கிகளில் ஒன்றாக பாங்க் ஆப் பரோடாவை உருவாக்கவும் முடியும் என்று அரசு கருதுகிறது. இதே முறையில் பல பொதுத் துறை வங்கிகளை இணைப்பதற்கான ஆலோசனைகள் அதிகாரபூர்வமற்ற முறையில் நடைபெற்று வருகின்றன என்று கூறப்படுகிறது.

இன்றைய நிலையில், கொடுத்த கடனைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகள், பலவீனமான சிறு வங்கிகள் இணைப்பு - இவை இரண்டுமே வங்கித் துறை சீரமைப்பு என்னும் நாணயத்தின் இருபுறங்கள் என்று கூறலாம்.

வங்கிகள் உருவாகிய வரலாற்றைப் பேசும் பழைய வீம்புகளைக் கைவிட்டு, வங்கித் துறையை ஆழ்ந்து ஆராய்ந்து, சரியான வங்கிகளை அடையாளம் கண்டு இணைப்பு நடவடிக்கைகளை உடனடியாக அரசு தொடங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com