இ-ரிக்ஷா புரட்சி!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையுடன் ஒப்பிடுகையில், மின்சாரத்தில் இயங்கும் கார்களின் விற்பனையானது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தைக் கொண்டது.
இ-ரிக்ஷா புரட்சி!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையுடன் ஒப்பிடுகையில், மின்சாரத்தில் இயங்கும் கார்களின் விற்பனையானது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தைக் கொண்டது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் பெட்ரோல், டீசலில் இயங்கும் சுமார் 30 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இதே மின்சாரத்தில் இயங்கும் கார்கள் என எடுத்துக்கொண்டால் அதன் விற்பனை வெகு சொற்பமே.

சீனாவில் மின்சாரத்தில் இயங்கும் 13.5 லட்சம் கார்கள் இயங்குகின்றன. இந்தியாவில் மொத்தமே 6 ஆயிரம் மின்சார கார்கள்தான் ஓடுகின்றன. ஆனால், இந்தியா சப்தமேயின்றி இ-ரிக்ஷா எனப்படும் மின்சாரத்தில் இயங்கும் ரிக்ஷாக்களின் விற்பனையில் சாதனை படைத்து வருவது ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஆம், இந்தியாவில் சுமார் 15 லட்சம் இ-ரிக்ஷாக்கள் இயங்குகின்றன. இது சீனாவில் 2011இல் இருந்து விற்பனையான மின்சார பயணிகள் வாகனங்களைவிட சற்று அதிகம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

தில்லி, கொல்கத்தா போன்ற ரிக்ஷாக்களுக்கு பெயர் பெற்ற நகரங்களில் இ-ரிக்ஷாக்கள் ஏராளமாக வலம் வருகின்றன. சப்தம் எழுப்பாதது, தூய்மையானது, வேகமாக ஓடுவது, பராமரிக்க எளிதானது என்பன உள்ளிட்ட காரணங்களால் இ-ரிக்ஷாக்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. தற்போது மாதத்திற்கு 11 ஆயிரம் இ-ரிக்ஷாக்கள் சந்தைக்கு வருகின்றன. 2021-இல் இந்த எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவைப் போல இ-வாகனங்களுக்கு மானியம், சார்ஜிங் பாயின்ட்களை அதிகரித்தல் உள்ளிட்டவற்றை அரசு விரைவுபடுத்தினால், இ-வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பது வாகன உற்பத்தியாளர்களின் கருத்து. தற்போது இந்தியாவில் 425 சார்ஜிங் பாயின்ட்களே உள்ளன. தனியார் ஒத்துழைப்புடன் இதன் எண்ணிக்கையை 2022-க்குள் 2800ஆக அதிகரிக்க மத்திய அரசு முயன்று வருகிறது.

மேலும், தனிநபர் வாகனங்கள் மட்டுமன்றி, பொதுப் போக்குவரத்திலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் வாகனங்களுக்கு மின்சாரம் ஏற்றும் நிலையங்கள், இ-பேருந்துகளுக்கு மானியம் உள்ளிட்ட ரூ.3600 கோடி மதிப்பிலான திட்டத்தை இறுதி செய்யும் பணியில் நிதித் துறை ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் இ-ரிக்ஷாக்களைப் போல இ-ஸ்கூட்டர்களின் பயன்பாட்டை பரவலாகப் பார்க்க முடிகிறது. வாகன சந்தையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களும் இ-கார்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. காற்று மாசு, ஒலி மாசுவால் பெருநகரங்கள், சிறுநகரங்கள் என்கிற வித்தியாசமின்றி இந்தியாவே மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், இ-கார்களின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com