பொதுப் பணவீக்கம் 4.53 சதவீதமாக சரிவு

நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 4.53 சதவீதமாக குறைந்தது.
பொதுப் பணவீக்கம் 4.53 சதவீதமாக சரிவு


நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 4.53 சதவீதமாக குறைந்தது.
இதுகுறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: மொத்தவிலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 4.53 சதவீதமாக குறைந்தது. இது, நான்கு மாதங்களில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும். இதற்கு முன்பு, கடந்த ஏப்ரலில்தான் பொதுப் பணவீக்கமானது 3.62 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. 
இப்பணவீக்கம் சென்ற ஜூலையில் 5.09 சதவீதமாகவும், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3.24 சதவீதமாகவும் காணப்பட்டன. உணவுப் பொருள்களின் விலை அதிலும் குறிப்பாக காய்கறிகளின் விலை குறைந்திருந்ததே பணவீக்க சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தது.
அதேசமயம், திரவ பெட்ரோலிய எரிவாயுவிற்கான (எல்பிஜி) பணவீக்கமானது 46.08 சதவீதம் என்ற அளவில் இருந்தது. சென்ற ஆகஸ்ட் மாதத்தில் டீசலுக்கான பணவீக்கம் 19.90 சதவீதமாகவும், பெட்ரோலுக்கான பணவீக்கம் 16.30 சதவீதமாகவும் காணப்பட்டன.
உணவுப் பொருள்களில், உருளைக்கிழங்கின் விலை தொடர்ந்து 71.89 சதவீதம் என்ற அளவிலேயே உயர்ந்து இருந்தது. அதேசமயம், வெங்காயம், பழங்கள் ஆகியவற்றுக்கான பணவீக்கம் முறையே 26.80 சதவீதம் மற்றும் 16.40 சதவீதம் என்ற அளவில் இருந்தன.
பருப்பு வகைகளின் விலை ஆகஸ்ட்டில் 14.23 சதவீதம் குறைந்து காணப்பட்டது. ஜூன் மாதத்துக்கான பணவீக்கம் திருத்திய மதிப்பீட்டில் 5.68 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய தற்காலிக மதிப்பீட்டில் 5.77 சதவீதம் என்று கணிக்கப்பட்டிருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. 
ஒரு சில நாள்களுக்கு முன்பாக, வெளியிடப்பட்ட ஆகஸ்ட் மாதத்துக்கான சில்லறைப் பணவீக்கம் 10 மாதங்களுக்குப் பிறகு 3.69 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com