பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 505 புள்ளிகள் சரிவு

சாதகமற்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தன.
பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 505 புள்ளிகள் சரிவு

சாதகமற்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 505 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியது.
அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போர் பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்தது. அதன் தாக்கம் சர்வதேச சந்தைகள் மட்டுமின்றி இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ரூபாய் மதிப்பை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தபோதிலும் அது பங்குவர்த்தகத்தின் ஏற்றத்துக்கு கைகொடுக்கவில்லை.
நேற்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 67 காசுகள் சரிந்து 72.51-ஆக நிலைபெற்றது.
ரூபாய் மதிப்பின் சரிவின் காரணமாகவும் பெரும்பாலான முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர்.
இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் நிதி துறை குறியீட்டெண் 1.44 சதவீதம் சரிவடைந்தது. அதைத் தொடர்ந்து எரிசக்தி 1.30 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 1.25 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் 1.20 சதவீதமும், வங்கி மற்றும் ஆரோக்கிய பராமரிப்புத் துறை குறியீட்டெண் தலா 1.08 சதவீதமும் குறைந்தன.
ஹெச்டிஎஃப்சி வங்கி 1.81 சதவீதமும், எஸ்பிஐ 1.65 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி 1.60 சதவீதமும், யெஸ் வங்கி 1.39 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 0.82 சதவீதமும், கோட்டக் வங்கி பங்கின் விலை 0.61 சதவீதமும் சரிந்தன.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள ஸன் பார்மா பங்கின் விலை அதிகபட்சமாக 2.85 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி நிறுவனப் பங்கின் விலை 2.47 சதவீதமும் குறைந்தன.
அதேசமயம், பவர்கிரிட், டிசிஎஸ், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. 
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 505 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 37,585 புள்ளிகளில் நிலைத்தது. 
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 137 புள்ளிகள் சரிந்து 11,377 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com